உள்ளே வெளியே ஆட்டம்.. பாஜக பக்கம் அமமுக வந்ததுமே இப்படியா நடக்கணும்? உரசும் பங்காளி, பகையாளி அரசியல்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி அரசியல் சமீப காலமாக சில மாற்றங்களை கண்டுள்ளது... இதில் பிரதானமாக பார்க்கப்படுவது டிடிவி. தினகரன் தன்னுடைய அமமுகவை, அதிமுக பாஜக கூட்டணியில் இணைத்த பிறகு நடந்து வரும மாற்றங்கள்தான்.... தினகரன் வந்ததையடுத்து சில சாதகமான ரிசல்ட் கூட்டணிக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்,அதிமுகவில் அதற்கான மாற்றம் நடப்பதாக தெரியவில்லை என்கிறார்கள்.. உண்மையிலேயே என்ன நடக்கிறது?
தமிழக அரசியல் களத்தில் அதிமுக மற்றும் அமமுக இடையிலான உறவு என்பது எப்போதும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது... தொடக்கத்தில் டிடிவி தினகரனைத் தனது கூட்டணிக்குள் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு காட்டிய போதிலும், பாரதீய ஜனதா கட்சியின் தொடர் அழுத்தம் காரணமாக இறுதியில் அந்த இணைப்பு சாத்தியமானது.

அமமுக தினகரன்
பொது மேடைகளில் பிரதமர் மோடி முன்னிலையில் இருவரும் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொண்டாலும், நிஜத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான கசப்புணர்வுகள் இன்னும் குறையவில்லை என்பதுதான் தற்போதைய கள யதார்த்தமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தென் தமிழக மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்களிடையே தினகரனுக்கு குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு உள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் அதிமுக மற்றும் அமமுக தனித்தனியாகப் போட்டியிட்டபோது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த வாக்குகள் பிரிந்தன. இந்த வாக்குப்பிளவு பல தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது.
பாஜக என்டிஏ கூட்டணி
இப்போது இந்தக் கூட்டணி அமைந்திருப்பதன் மூலம், வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்படும் என்றும், சில தொகுதிகளில் நிலவும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தைக்கூட தினகரனின் ஆதரவு மாற்றி அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், இந்த உறவில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த எச்சரிக்கையுடனேயே செயல்படுவதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். அமமுக கூட்டணிக்குள் வந்த பிறகு தினகரனுடன் அவர் வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொண்டது அதிமுகவின் ஒரு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரகசிய குழு கண்காணிப்பு
அதே சமயம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் தினகரனுடன் ரகசியமாக நெருக்கம் காட்டி வருவதாக எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு சென்றுள்ளது. தனது பிடியிலிருந்து கட்சி நழுவிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், தினகரனுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதற்காக ஒரு ரகசியக் கண்காணிப்புக் குழுவையும் அவர் அமைத்துள்ளதாகத் தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு கசிந்தன..
கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலம் கடந்த பின்னரும், கள அளவில் இரு கட்சி தொண்டர்களிடையே பிணைப்பு ஏற்படவில்லையாம்.. இணக்கமான போக்கும் ஏற்படவில்லையாம்..
எடப்பாடி பழனிசாமி
நேற்றைய தினம் தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு அமமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை. அதாவது எடப்பாடி மேடையில் ஏற தினகரன் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்பதே அவர்களின் பதிலாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேலை செய்வது என்றும், அதிமுக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் அமமுகவினர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக்கு நஷ்டம்?
சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் கூட்டணி என்பது வாக்குப்பிளவை தவிர்க்கும் ஒரு தற்காலிக உத்தியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மனதளவில் இன்னும் ஒட்டாத தலைவர்களும், பிளவுபட்டுக் கிடக்கும் தொண்டர்களும் இந்தக் கூட்டணியின் வெற்றியை எந்த அளவிற்கு உறுதி செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமூக ஆதரவை ஒருங்கிணைப்பதில் தினகரனின் தாக்கம் இருந்தாலும், அதிமுகவின் உட்கட்சி பாதுகாப்பும் தினகரன் மீதான நம்பிக்கையற்ற தன்மையுமே தற்போது மேலோங்கி நிற்கிறது... இது கண்டிப்பாக கூட்டணி ரிசல்ட்டை உலுக்கவே செய்யும்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications