"பச்சை துரோகம்".. ஸ்டாலின் தரப்போகும் "லட்டு" நியூஸ்.. அரசு ஊழியர்களா.. கோட்டை முழுக்க இதே பேச்சாமே
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 2 வருடங்கள் மேலும் உயரலாம் என்கிறார்கள்
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், அதை செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று திமுக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், அரசு ஊழியர்களை கூல் செய்ய இன்னொரு யோசனையில் திமுக இறங்கி உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக முன்பு அளிக்கப்பட்டு வந்தது... அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுதான் வந்தது...
இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஓய்வூதிய திட்டம்
இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது, மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்... புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.

திமுக
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.. ஆனால், திமுக வெற்றி பெற்று ஓராண்டு கால ஆட்சி நிறைவுற்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்து விட்டது. இது அரசு ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது.

செட்டில்மெண்ட்
திமுக அரசு நம்பவைத்து பச்சை துரோகம் செய்துவிட்டதாக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த புது தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் என 10 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களின் பணி காலம் 58 வயதாகும்.. அதன் பிறகு அவர்கள் பணி ஓய்வு பெற்று விட வேண்டும். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கான பணி ஓய்வு பலன்களை ( பழைய பென்சன் திட்டத்தில் இருப்பதால்) அரசாங்கம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும்.

நிதி நெருக்கடி
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் நிதி நெருக்கடி அதிகமாக இருந்ததால் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுப்பதில் சிக்கல் இருந்தது. அவர்களுக்குரிய செட்டில்மெண்ட் தொகையை கொடுக்க முடியாத நிலை. இதனை அடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியது முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு. இந்த நிலையில், தற்போது இதே முடிவை எடுக்க திமுக அரசும் திட்டமிடுவதாக தெரிகிறது.

உயர்த்தலாமா
இந்த மே மாதம் தொடங்கி நடப்பு நிதியாண்டில் ( 2022-2023 , 1 வருடம் ) மட்டும் ஓய்வுபெறவிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக கொடுக்க சுமார் 18,000 கோடி திமுக அரசுக்கு தேவைப்படுகிறதாம். அந்தளவுக்கு திமுக அரசிடம் பணம் இல்லை. இதனால், இவர்களின் ஓய்வு வயதை மேலும் 2 ஆண்டுகளுக்கு உயர்த்தலாமா ? என்று தலைமைச் செயலக நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் ஒரு ஆலோசனை நடந்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்கும் இதனை கொண்டு போயிருக்கிறார்கள்.

அதிருப்தி அறுவடை
இதனால் ஓய்வு பெறும் வயது மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தப்படுமா ? என்ற கேள்வி அரசு ஊழியர்களிடம் பேசு பொருளாகி வருகிறது.. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாத நிலையில், இந்த அறிவிப்பினை வெளியிடுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தியையும், கோபத்தையும் மெல்ல விலக்க முடியும், அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்றும் கணக்கு போடப்படுகிறது.. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications