ரோடு சரியில்லையா.. போனை எடுங்க..போட்டோ எடுங்க.. தமிழக அரசு தந்த தீபாவளி சர்ப்ரைஸ்
சென்னை: உங்கள் ஊரில் சாலை சரியில்லையா? 'நம்ம சாலை' ஆப்பில் புகாரளிக்கலாம். நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.
சாலைகள் பல ஊர்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் இன்னமும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. அரசு சார்பில் ஒப்பந்ததார்கள் போடும் சாலைகளின் தரம் குறித்து நீண்ட காலமாக விமர்சனங்கள் உள்ளன. ஏனெனில் சாலைகள் சில நாட்களிலேயே பெயர்ந்துவிடும் என்றும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சாலையின் தரம் மட்டும் மாறுவதே இல்லை என்ற புகார்கள் உள்ளது.

சாலைகளின் நிலையை சரி செய்ய பலமுறை கோரிக்கை வைத்தாலும் நடவடிக்கை உடனே எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பல லட்சம் வாகனங்கள் தினமும் செல்லும் சாலைகளே மோசமான நிலையில் உள்ளது.
இதற்கு தீர்வு எப்போது என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது. சாலைகளில் உள்ள குறைகளை தெரிவிக்க ஆப் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் இதுபற்றி நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவும் ஒருமுறை கூறியிருந்தார்.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ள நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். சாலைகளில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மக்கள் நேரடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும வகையில் நம்ம சாலை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நம்ம சாலை ஆப் மூலம், உங்கள் ஊரில் சாலையில் பள்ளங்களோ, குழிகளோ, சேதங்களோ அல்லது இதர இடர்பாடுகளோ இருந்தால், மக்கள் அதனை படம் எடுத்து பதிவேற்றலாம். மாநில நெடுஞசாலைகள் 24 மணி நேரத்திலும்,மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும். சாலை சீரமைக்கப்பட்ட பிறகு அந்த படங்களும் இந்த செயலில் பதிவேற்றப்படும் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.
— Udhay (@Udhaystalin) November 1, 2023
சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில்… pic.twitter.com/u1PuzQqfn9
இந்த ஆப்குறித்து பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.இனிமேல் சாலைகளில் பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயம் புகார் அளித்து நிவாரணம் பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேநேரம் சென்னையில் சில இடங்களில் சாலைகளே இல்லை என்கிற அளவிற்கு மோசமாக உள்ளதாகவும், அப்படிப்பட்ட மோசமான சாலைகளை புதிதாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதனிடையே சென்னையை பொறுத்தவரை, குன்றத்தூர் - விருகம்பாக்கம், கெருகம்பாக்கம் - மணப்பாக்கம், அய்யப்பந்தாங்கல் - போரூர் டோல்கேட் , போரூர் - பூந்தமல்லி, வடபழனி - கோடம்பாக்கம்,
கேகே நகர் - ஜாபர்கான்பேட்டை, துரைபாக்கம் - ஈஞ்சம்பாக்கம் ,பள்ளிகரணை - மேடவாக்கம், பள்ளிக்கரணை டு பல்லாவரம் ரேடியல் சாலை, மடிப்பாக்கம் தெற்கு பகுதிகள் முழுவதும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications