மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு யார் காரணம்? மாநில அரசா? ஒன்றிய அரசா? - காரசார விளக்கம்
சென்னை: மக்களவையில் மணிப்பூர் கலவரம் பற்றிய விவாதம் கடைசியில் திமுக V/s பாஜக மோதலாக மாறி இருக்கிறது. 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசுதான் காரணம்' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
அதற்கு, 'மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவலை நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்' என்று திமுக எம்.பிக்கள் மிகக் கடுமையான புகாரை அளித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு குறித்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன சொல்கிறார்? அவரது விளக்கம் என்ன? தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசுதான் காரணமா?
"கடந்த 2015இல் இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு சேர்த்து கோரக்பூர், கவுகாத்தி, ஜம்மு, பிலாஸ்பூர், அவந்திபூரா ஆகிய பகுதிகளிலும் எய்ம்ஸ் வர உள்ளதாக அறிவித்தது ஒன்றிய அரசு.

மற்ற மாநிலங்களில் ஒன்றிய அரசு நிதி ஏன்?
அதற்குப் பிறகு 2017இல் ராஜ்கோட், தெலங்கானா, ஜார்கண்ட் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் வர உள்ளதாக அறிவித்தது. மேலும் 2019இல் ஹரியானாவில் உள்ள மசூரா மற்றும் 2022இல் கர்நாடகா, மணிப்பூர் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என அறிவித்தது.
இவை அனைத்தும் ஒன்றிய அரசின் முழு நிதியால் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் மாநில அரசின் நிதி என்பது துளியும் இல்லை. இடத்தை ஒதுக்கித்தருவது மட்டுமே மாநில அரசின் பணி.

அதே அளவுகோலின்படியே தமிழ்நாடு அரசு நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசே மொத்த செலவையும் ஏற்கும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜய்காவிடம் கடன் கேட்டுக் கையேந்தி நிற்கிறது ஒன்றிய அரசு.
நான் கேட்பது ஒரே கேள்விதான். மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் போது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவது ஏன்? இதைப் பற்றிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. சரி, பரவாயில்லை கடனை வாங்கியாவது கட்டி முடிப்பார்கள் என நம்பினோம். அது இதுவரை நடக்கவே இல்லை.

இப்போது நிதியமைச்சர் நிர்மலா. சீதாராமன், "முன்பு 600 படுக்கைகள் திட்டமிட்டோம். இப்போது 900 படுக்கைகள் என்ற அளவில் அதிகரித்திருக்கிறோம்" என்று பெரிய சாதனையாகக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்.
அவருக்கு நான் ஒரு தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ,முன்னால் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின்னர் திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு மூன்று நிறுவனங்களுக்குக் கட்டுமான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டன. அதைக் கட்டி முடித்து ஒன்றரை ஆண்டுக்குள் 1000 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனையை அவர் திறந்துவைத்து இன்று ஒன்றரை மாதம் ஆகிவிட்டது.
ஒரு மாநில அரசால், 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஒன்றரை ஆண்டில் கட்டமுடிந்து திறக்க முடிந்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸுக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.

முதலில் 1200 கோடியில் திட்டமிட்டோம் என்றார்கள். இப்போது 1900 கோடியாக உயர்ந்துவிட்டது என்கிறார்கள். நாங்களே ஜப்பானில் உள்ள ஜய்கா நிறுவனத்திடம் விசாரித்தோம். அவர்கள் நிதி கேட்டுள்ளார்கள் என்று தகவல் சொன்னார்கள்.
ஜய்கா சொன்ன உண்மைகள் என்ன?
அதற்கான கட்டுமான வரைப்படப் பணி 2024 இல் தான் முடிவடையும். 2028இல் மருத்துவமனைக் கட்டிடங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். நாங்களும் முதல்வர் ஸ்டாலின் சார்பாக ஜய்கா நிறுவனத்தின் துணைத்தலைவரிடம் விரைந்து கட்ட தொகையை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.
நான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கேட்கிறேன். இத்தனை மாநிலங்களில் ஒன்றிய அரசு செலவு செய்கிறது. நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள். தமிழர் நலன் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கூடச் சொல்கிறீர்கள். ஏன் ஒன்றிய அரசின் நிதியை மதுரைக்கு மட்டும் ஒதுக்காமல் புறக்கணித்தீர்கள்? மற்ற மாநிலங்களில் காட்டிய கருணையை ஏன் தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டவில்லை?" என்கிறார்

அடுத்து திமுக எம்.பி. திருச்சி சிவா, " மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்து ஆண்டு கணக்கில் நாள்கள் ஆகிவிட்டன.
ஆனால், அந்த இடத்தில் மருத்துவமனைக் கட்டுவதற்கான எந்தவித அறிகுறியும் இதுவரையிலும் இல்லை. ஆனால் பாஜக ஒன்றிய அரசு முன்பு இருந்தே நாங்கள் எல்லாம் செய்துவிட்டோம் என்று. மதுரையில் வாழும் மக்களுக்குத் தெரியும் அவர்கள் அங்கே என்ன செய்திருக்கிறார்கள் என்பது.
இந்த மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டுள்ளதா என மதுரை மக்கள் மட்டுமா தெரிந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊர் மக்களைக் கேட்டாலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறுவார்கள். அந்தளவுக்குப் புகழ் பரவியுள்ளது.

தமிழ்நாட்டை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லைக் கையில் தூக்கிக் கொண்டுவந்து பொதுமக்களிடம் காட்டினாரே அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறது. ஏதோ எங்களைப் பேச வேண்டும் என்று பேசுகிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது ஒன்றிய அரசுதான். அவர்கள்தான் கடமையிலிருந்து தவறி இருக்கிறார்கள்.
மதுரைக்குப் பின்னால் சில மாநிலங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு, அங்கு எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டியே முடித்துவிட்டார்கள் . அவை மக்கள் பயன்பாட்டுக்குக் கூட வந்துவிட்டன.
ஆனால், மதுரையில் தொடங்கிய நிலையிலிருந்து ஒரு படிகூட வேலைகள் இன்னும் முன்னேறவில்லை. தமிழ்நாட்டை பாஜக வழக்கம் போல் மாற்றான் தாய் மனநிலையோடுதான் அணுகி வருகிறது. அதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையே சாட்சி" என்கிறார்
மதுரை மண்ணின் மைந்தர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு வெங்கடேசன் என்ன சொல்கிறார்?
"மதுரை எய்ம்ஸ் தொடர்ந்து ஒன்றிய அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது. அதுதான் உண்மை. ஒன்றிய அரசு மருத்துவமனையைக் கட்டுவதாகச் சொல்லி 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இதே கதையை எத்தனை முறை நீங்கள் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்?
கேட்டுக் கேட்டு புளித்துபோன கதைகள்:
நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன அதே கதையை எழுத்துப்பூர்வமாக 15 முறை ஒன்றிய அரசு கூறியுள்ளது. 'நாங்கள் கடன் வாங்க இருக்கிறோம். 1500 கோடியை ஜய்கா கொடுக்க உள்ளது. ஆகவே நாங்கள் விரைவில் தொடங்கப் போகிறோம்' என்று பலமுறை கூறிவிட்டது. இந்தக் கதையைக் கேட்டுக்கேட்டுக் கடந்த 5 ஆண்டுகளாகக் காதே புளித்துப் போய்விட்டது.
எனவேதான் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சொன்னபோதே, உடனே எழுத்து 'எப்பொழுது? எப்பொழுது?' என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். இந்த 5 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒற்றை செங்கல்லைத் தாண்டி இரண்டாம் செங்கல் என்ற நிலையை நோக்கி நகரவில்லை என்பதுதான் உண்மை நிலை.
தமிழகத்தை மோடி அரசு புறக்கணித்து வருகிறது என்பதற்கான சான்று மதுரை எய்ம்ஸ். அதை நிதியமைச்சர் அவரது பேச்சின் மூலம் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். அதுவே உண்மை" என்கிறார்












Click it and Unblock the Notifications