வெற்றிலை பாயாசம் முதல் மலாய் சான்ட்விச் வரை 4500 பேருக்கு விருந்து! விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் உணவா?
சென்னை: 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்க்கு ஸ்பெஷல் சாப்பாடு தயார் செய்யப்பட்டதாக வரும் தகவல்களின் உண்மை நிலவரம் என்ன?
கடந்த ஜூலை 28ஆம் ஆண்டு இரண்டாவது ஆண்டாக 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

21 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் பாஸ் கொடுத்தனர். அந்த பாஸ் இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அது போல் நிகழ்ச்சி முடியும் வரை , செல்போன், நோட்டுப் புத்தகங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவற்றை நிர்வாகிகள் வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சி முடிந்து சென்ற போது திருப்பி அளித்தனர். விஜய் நிகழ்ச்சிக்கு வந்த போது தளபதி பாடல் ஒலிக்கப்பட்டது.
விஜய்க்கு மாணவர்களும் பெற்றோர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கரவொலியும் விசில் சப்தமும் அடங்கவே 15 நிமிடங்கள் ஆனது. இதையடுத்து விஜய் ஒவ்வொருத்தருக்காக பரிசு பொருட்களை அளித்தார். கடந்த முறையை போல் இந்த முறையும் விருதுகளை வாங்க வந்தவர்களுக்கு அறுசுவை உணவு அளித்திருந்தார்.
மொத்தம் 16 வகையான உணவு வகைகள் மதியம் பரிமாறப்பட்டன. அதில் வடை அப்பளம், அவியல் உடன் சேர்த்து ஸ்வீட்டிற்கு வெற்றிலை பாயாசம், சாதம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, பக்கோடா, மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆனியன் மணிலா, தக்காளி ரசம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
எல்லாரையும் சாப்பிடச் சொல்லித்தான் விஜய் அனுப்பி வைத்தார். அது போல் மதிய உணவு இடைவேளையின் போது எல்லாரும் சாப்பீட்டீங்களா என கேட்டதும், நானும் போய் லைட்டா சாப்பிட்டு 5 நிமிஷத்தில் வரேன் என சொல்லிவிட்டு போனார்.
மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு இல்லாமல் விஜய்க்கு என ஸ்பெஷலாக உணவு பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அங்கு சமையல் செய்த கலைஞர் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், கடந்த முறையும் நாங்கள்தான் சமைத்தோம். அப்போது 5000 பேருக்கு சமைக்க சொல்லி 7000 பேர் சாப்பிட்டனர்.
அது போல் இந்த ஆண்டு 3000 பேருக்கு சமைக்க சொல்லி 4500 பேர் வரை சாப்பிட்டனர். விஜய்க்கு என எந்த ஸ்பெஷல் உணவும் தயாரிக்கப்படவில்லை. விஜய் தரப்பும் அவருக்கென தனியாக சமைத்துக் கொடுங்கள் என்று கேட்கவில்லை, எல்லோரும் என்ன சாப்பிட்டார்களோ அதைத்தான் விஜய்யும் சாப்பிட்டார். இவ்வாறு அந்த சமையல் கலைஞர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications