ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் கட்சிக்கு கூட்டணியில் இடம் உண்டா? ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி
சென்னை: டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநயக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா? என்பதை 'காலம் பதில் சொல்லும்' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதேபோல, காலில் கூட விழுகிறோம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் அணியில் கேட்பது காலம் கடந்த செயல். காலம் கடந்துவிட்டது எனவும் எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்க கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலுவாக உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து வருகிறது.

அதிமுக கூட்டணி
தங்கள் கூட்டணியில் பிரமாண்ட கட்சி ஒன்று வரும் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். அதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆனால் தற்போது தனது சுற்றுப்பயணத்தின் போது கூட்டணி கட்சிகளின் பெயரை சொல்லும் போது அமமுக பெயரை எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். இந்த நிலையில்தான், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி இது குறித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அமமுக உங்கள் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா? என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். மேலும், காலில் கூட விழுகிறோம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் கேட்பது காலம் கடந்த செயல். காலம் கடந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காலம் கடந்துவிட்டது
அதேபோல, கூட்டணி கட்சியாக ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, 'எல்லாம் கடந்துவிட்டது. தனி கட்சி தொடங்கினால்தானே அதுபற்றி பேசனும். அதிமுகவுக்கு எதிராகத்தானே அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்' என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம் பெற போகும் பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்விக்கு, அது ரகசியம் என்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தேர்தலுக்கு தேர்தல் மக்களுடைய மனநிலை மாறும். மக்கள் விரும்பும் கட்சியே ஆட்சிக்கு வரமுடியும். இப்போது மக்கள் அதிமுகவை விரும்புகிறார்கள். அதனால் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறது. ஒத்த கருத்துடைய கட்சிகளைத்தான் தற்பொது கூட்டணிக்கு அழைக்கிறோம்.
தவெக கூட்டணிக்கு வருமா?
தவெக அதில் அடங்குமா? என்று கேட்கிறீர்கள். யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். காலம் கனிந்து வரும் போது எல்லாம் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அந்தக் கட்சியும் எண்ணுகிறது. இப்படி ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கான சூழல் அமைவது என்பதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். நடக்கலாம் என்று எண்ணுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications