துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்? முதலமைச்சரின் முடிவு என்ன? திமுகவில் ஹாட் ஆஃப் தி டாபிக்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்த ஒரு பேச்சு திமுக வட்டாரத்தில் மீண்டும் எழுந்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் உதயநிதிக்கு புரோமோஷன் வழங்குவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறது ஒரு தரப்பு.
முதலமைச்சர் ஸ்டாலினோ நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை அது குறித்து சிந்திக்கவேமாட்டார் என்கிறது மற்றொரு தரப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து கட்சிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்த பிறகு ஒரு வேளை வெற்றிப்பரிசாக துணை முதல்வர் பதவி கொடுக்கபடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாவிட்டாலும் இப்போது சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் என்கிற முறையில் துணை முதல்வர் பதவிக்கு நிகராக தான் தனது கையில் பவரை வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதைத்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கூட அமைச்சர் அன்பில் மகேஷ் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் எந்த ஊருக்கு ஆய்வுக்கு சென்றாலும் அரசுத்துறை அதிகாரிகள் கையில் கோப்புகளுடன் உதயநிதி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் ஆஜராகிவிடுகின்றனர். இதற்கு காரணம் அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் மட்டுமல்ல சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அமைச்சராகவும் இருப்பதேயாகும்.
இதனிடையே அண்மையில் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவில் நடிப்பதை விட வேறு சில முக்கிய பொறுப்புகள் இருப்பதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் அரசியலில் இன்னும் பல சிகரங்களை அவர் எட்டுவார் எனவும் சபரீசன் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications