விஜய்தான் பிரதமர் வேட்பாளரா? தவெக எம்.எல்.ஏ பேச்சுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் புது விளக்கம்
சென்னை: விஜய்தான் அடுத்த பிரதமராக வருவார் என்று நேற்று தவெக எம்.எல்.ஏ கனிமொழி கூறியதும், அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் கொடுத்த பதிலடியும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக அமைச்சர் வெங்கடரமணன், "தவெக எம்.எல்.ஏக்களின் கருத்து தனிபட்ட கருத்து" என்று கூறினார். அதேவேளையில், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இன்னும் நாட்கள் இருக்கிறது என மழுப்பலாக பதிலளித்துவிட்டு சென்றார்.
தவெக பொருளாளரும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கட்ரமணன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, அவரிடம் தவெக எம்.எல்.ஏக்கள் பலரும் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று கூறி வருவது பற்றி கேட்டனர். இதற்கு பதிலளித்த வெங்கடரமணன் மழுப்பலாக பதிலளித்தார். அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது:-

விஜய் பிரதமர் வேட்பாளர்
சின்ன கருத்து மாறுபாடு உள்ளது. தவெக தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்து கூறுவார்கள். இது அவர்களின் தனிப்பட்ட கருத்துதான். விஜய், புஸ்சி ஆனந்த் இப்படி சொல்வது இல்லை. அமைச்சர்கள் யாரும் சொல்வது கிடையாது. அமைச்சர்கள் கருத்து கொடுத்தாலும் அது முதல்வரோடு ஒருங்கிணைந்து கேட்டுத்தான் கொடுப்போம். எம்.எல்.ஏக்கள் அபரிமிதமான ஆசையாலும் அன்பாலும் சொல்கிறார்கள்.
எங்க ஆசை இது
இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்கிறோம். லஞ்சம் ஊழலை ஒழிக்கிறோம். நேர்மையான வெளிப்படையான ஆட்சியை கொடுக்கிறோம் என்பதால் அவர்கள் ஆர்வமாக இதை தமிழ்நாடு மட்டும் இல்லை. இந்தியா முழுக்க கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வரும் காலத்தில் முதல்வரிடம் பேசி ஆலோசிப்போம்.. இன்னும் டைம் நிறைய இருக்கு. 2029 தான் இன்னும் டைம் இருக்கு. அந்த காலம் வரும் போது இதுபற்றி முடிவு செய்வார்.
என் விருப்பம் ஒன்றே ஒன்று தான்.. ஊழல் இல்லதா ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி நேர்மையான ஆட்சி.. மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டில் அதை முறைபப்டுத்துவோம். மற்ற மாநிலங்களில் இதற்கான முயற்சிகளை வரும் காலங்களில் முதல்வர், பொதுச்செயலாளரிடம் ஆலோசனை பெற்று விரிவாக்கம் செய்வோம். தேசிய செயல்பாடுகளை பொறுத்தவரை அந்த டைமில் அதைப்பற்றி யோசிப்போம்" என்றார்.
தவெக - காங்கிரஸ் மோதல்
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தவெக - காங்கிரஸ் இடையே பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் எனப்பேசி வரும் நிலையில், தவெக எம்.எல்.ஏக்கள் சிலர் விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரசிகர் மனநிலையில் இருக்காங்க
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கிறர்கள்" என்றார். காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறும் போது, 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என்றார். இதனால், இந்த பிரச்சனை பெரும் விவாதப்பொருளானது. இதைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தனர்.
இதனால், கொஞ்சம் பரபரப்பு அடங்கிய நிலையில், நேற்று கவுண்டம் பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி, 2029 ஆம் ஆண்டில் பிரதமர் வேட்பாளர் விஜய்தான். 2025ஆம் ஆண்டு நான் கணித்தது போல 2026-ல் விஜய் முதல்வர் ஆனார். 2029-ல் தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் உருவாக போகிறார். ராகுல் காந்திதான் விஜய்யை பிரதமராக அமரவைப்பார்" என்றார். இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் உடனடியாக பதிலடி கொடுத்தார். தாரகை கத்பட் கூறுகையில், 'ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் அவரை விஜய் முன்நிறுத்துவார். தவெக எம்.எல்.ஏக்கள் ரசிகர் மனநிலையில்தான் இருக்கிறார்கள்' என்றார்


Click it and Unblock the Notifications
