நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறுவது ஏற்புடையதா? அரசு தரப்பு வைத்த அடுக்கடுக்கான வாதங்கள்.. முழு விவரம்
மதுரை: திருப்பரங்குன்றம் பிரச்சனை வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் மனுதாரரின் தனிப்பட்ட கோரிக்கை பொதுநல வழக்கு போல விசாரிக்கப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகம் தீபத் தூணில் தீபம் ஏற்ற மறுத்ததால் மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன் என தனி நீதிபதி கூறுவது ஏற்புடையதா? மனுதாரருடைய கோரிக்கைகளின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் முறையிட்டனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழக அரசு தரப்பு மற்றும் கோயில் தரப்பில், பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மிகவும் பழமையானது. அங்கு கார்த்திகையன்று பாரம்பரிய இடத்தில் தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி தனி நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால் அந்த மலையில் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. ஆனால் தனிநபர் கோரிக்கையாக தாக்கல் செய்த மனு, பொதுநல மனுபோல் தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மனுவில், மனுதாரர் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியிருந்தார். மனுதாரருடைய கோரிக்கைகளின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
முதலில் 72 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. 1912ஆம் ஆண்டு இதுகுறித்த பிரச்சினை எழுந்தது. அதன் தீர்ப்பானது 25.08.1923 அன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் தீபமேற்றுவது தொடர்பாக ஏதும் கோரப்படவில்லை. அதன்பிறகு ஆண்டுதோறும், உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபமேற்றப்படும். இந்த ஆண்டும் அதுவே பின்பற்றப்பட்டது.
ராமரவிக்குமார் எனும் மனுதாரர் கோயில் நிர்வாகமோ அல்லது அவரோ தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இது தனிநபரின் கோரிக்கை. அந்த கோரிக்க நிராகரிக்கப்பட்டதால், அவர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,
உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதால் எந்த பிரச்சினையும் எழவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் ஒரு இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. ( நீதிபதிகள் குறுக்கிட்டு பேசுகையில், "திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் சர்வே தூண் தான் என்று உறுதி செய்து உள்ளீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலும் தரப்பட்டது)
திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ளது சர்வே கல்தான். பல்வேறு ஆண்டுகளாக பின்பற்றிவரும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. மோட்ச தீபம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத் தூணில்தான் ஏற்றுவது வழக்கம்.
சிலர் சிக்கந்தர் தர்காவை இடம் மாற்றம் செய்ய வேண்டுமெனவும், தகர்க்க வேண்டுமெனவும் துண்டறிக்கை வெளியிட்டார்கள். அப்போது, 2005 ஆம் ஆண்டு தர்கா மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அமைதிப் பேச்சு வார்த்தை அழுத்தத்தின் அடிப்படையிலேயே நடந்தது. அதனை தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை மனுதாரர் மனுவை உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணியின் கருத்தையே மனுதாரர் வலியுறுத்தி இருக்கிறார். மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை . இந்த பிரச்சினை வரலாற்றுடன் தொடர்புடையது. ஆனால் மனுதாரரின் தனிப்பட்ட கோரிக்கை பொதுநல வழக்கு போல விசாரிக்கப்பட்டிருக்கிறது. கோயில் நிர்வாகம் தீபத் தூணில் தீபம் ஏற்ற மறுத்ததால் மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன் என தனி நீதிபதி கூறுவது ஏற்புடையதா?
இந்த பதட்டமான சூழ்நிலையில் நாம் முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். மூன்று நாட்களில் தீபம் ஏற்றுவது குறித்து எவ்வாறு நாம் முடிவு எடுக்க இயலும்? திருப்பரங்குன்றம் மலையை சுற்றி தீபம் ஏற்ற வேண்டுமென்றால் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இது இந்து சமய அறநிலையத்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
அப்படி வேறு இடத்தில் தீபம் ஏற்றவேண்டும் என்றால், இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு, முறையாக அனுமதி பெற்று தேவஸ்தானமே இடத்தை மாற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடம் தர்கா மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டுமென முந்தைய உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்க இயலாது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஆகம விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆகம விதிகளை மீறி தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட முடியாது. தர்கா அருகே தீபம் ஏற்றினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்" இவ்வாறு அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications