2024ல் யார் தலைமை என்பது முக்கியமல்ல.. பாஜகவை வீழ்த்துவதே முக்கியம்.. மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!
2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முக்கியமல்ல என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
சென்னை: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முக்கியமல்ல, பாஜகவை அனைவரும் இணைந்து வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்கும் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்றும், அனைத்து சக்திகளையும் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கோர் திரண்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். எப்போதும் தமிழ்நாடு முற்போக்கு சமுதாயமாக இருந்து வந்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
ராஜாஜி, காமராசர், பெரியார், அண்ணா, கருணாநிதி தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான மனோபாவத்தை வளர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில்துறை நலன், மக்கள் நலனில் எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது தமிழ்நாடு. 2009ல் இந்தியாவின் இளஞ்சிங்கம் என்று ராகுல் காந்தியை கருணாநிதி புகழ்ந்தார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை
இன்று நாடு அபாயகரமான சூழலில் சிக்கித் தவித்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் 2004, 2009ல் பெரும் வெற்றிபெற்றது. அதுபோல் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். பாஜக அரசின் கொள்கைகளால் 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.

பாஜக மீது விமர்சனம்
அவர் தொடங்கி வைத்த யாத்திரை, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. நீதித்துறையை எப்படியாவது தங்களின் கைகளுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்கும் ஸ்டாலின் தலைமை தாங்குவார். அனைத்து சக்திகளையும் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பார்.

யார் தலைமை
பிரிவினை சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி யார் தலைமை என்பது பொருட்டல்ல. அனைவரும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும். பிரதமர் வேட்பாளர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைமை என்பதும் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications