சத்தியமூர்த்தி பவன் கிடையாது.. விஜய் பவன்னு மாத்திக்கோங்க! காங்கிரஸ் மீது திமுக காட்டம்!
சென்னை: காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் பெயரை விஜய் பவன் என மாற்றிக்கொள்ள வேண்டும் என திமுக விமர்சித்திருக்கிறது.
திமுகவின் சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் வெளியிட்ட அறிக்கையில், "தவெக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் நேரு, அம்பேத்கர், ஈவெரா பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கு மானம், ரோஷம் இல்லையா?

முதல்வர் விஜயை போற்றி பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை, விஜய் பவன் என மாற்றிக்கொள்ளுங்கள்" என்று காட்டமாக கூறியிருக்கிறார். காங்கிரஸ் மீது இப்படியான குற்றச்சாட்டை கதர் தலைவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் காட்டமாக பதிலளித்துள்ளனர்.
தமிழக பொருளாளர் ரூபி மனோகரன், "திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்புகளில் அம்பேத்கர் பெயர் எங்குமே இல்லை. அப்போது சட்டசபையில் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா?
சத்தியமூர்த்தி பவன் பெயரை மாற்ற சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் நேரு, அம்பேத்கரை கையில் எடுக்கும் திமுகவினர் அறிவாலயத்தின் பெயரை என்னவென்று மாற்றப்போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படியாக காங்கிரஸ், திமுக மோதல்கள் அதிகரித்துள்ளன.
சரி திமுகவுடன்தான் காங்கிரஸ் சண்டை போடுகிறது என்று நினைத்தால்.. கூட்டணிக்கு இடம் கொடுத்த தவெக உடனும் காங்கிரஸ் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது. பிரதமர் வேட்பாளராக விஜயை நிறுத்த வேண்டும் என்று தவெகவினர் பேச.. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ், "தவெகவினர் ரசிக மனநிலையில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை" என்று கூறியிருக்கிறது. மட்டுமல்லாது ஒரு எம்பி கூட இல்லாத தவெகவை எப்படி இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி மொக்கை செய்திருக்கிறது.
இதற்கெல்லாம் பழிவாங்கதான், கேரளாவில் கட்சியை வளர்க்க தவெக தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில் விஜய்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எனவே விஜய் உடன் கூட்டணி வைத்தால் இந்த ரசிகர்களின் வாக்குகளை.. காங்கிரஸ் வாக்குகளாக மாற்றலாம் என்று கதர் தலைவர்கள் பிளான் போட்டனர். ஆனால், தவெக தனியாக பயணிக்க திட்டமிட்டு களத்தில் இறங்கியிருக்கிறது. இப்படியாக காங்கிரஸுக்கு திரும்பும் பக்கமெல்லாம் குழி பறிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
