Arattai-யில் கணவன் - மனைவி இடையே நெருக்கமான படங்களை பகிர முடியுமா? இளைஞருக்கு ஜோஹோ ஸ்ரீதர் பதில்
சென்னை: வாட்ஸ்அப்புக்கு மாற்றாக ஜோஹோ நிறுவனத்தின் ‛அரட்டை' செயலி பிரபலமடைந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் முதல் பலரும் ‛அரட்டை' செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான், ‛அரட்டை' செயலியில் கணவன் - மனைவி இடையேயான நெருக்கமான போட்டோக்களை பகிர்வது பாதுகாப்பானதா? அப்படி போட்டோ அனுப்பும்போது அதனை ஜோஹோவில் இருப்பவர்களால் அணுக முடியுமா? என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார்.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு ஜோஹோ ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனம் ‛அரட்டை' என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி கடந்த 2021ல் அறிமுகம் ஆனாலும் கூட நம் நாட்டு மக்களிடம் பிரபலமாகவில்லை. இதற்கிடையே தான் தற்போது அந்த செயலி பிரபலமடைய தொடங்கி உள்ளது.

நம் நாட்டு மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்ததன் விளைவாக நம் நாட்டில் இருந்து அங்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சரிவை சந்தித்துள்ளன. இந்த இழப்பை சரிசெய்யும் வகையில் உள்நாட்டு பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். உள்நாட்டில் தொழில்கள் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இதனால் தற்போது அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பதிலாக பலரும் நம் நாட்டின் தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பலரும் ‛அரட்டை' (Arattai) செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். வாட்ஸ்அப் என்பது அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனால் அதற்கு பதிலாக பலரும் ஜோஹோவின் ‛அரட்டை' செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான், ரவி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தின் மூலமாக ‛அரட்டை' செயலி பற்றி ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது கணவன் - மனைவி இடையேயான நெருக்கமான அந்தரங்க படங்களை பரிமாறி கொள்ள முடியுமா? இது பாதுகாப்பானதா? என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ரவி, ‛‛ரகசிய காதலர்களை மறந்துவிடுங்கள். ஒரு கணவரும், மனைவியும் தங்களுக்கு இடையேயான நெருக்கமான அந்தரங்க படங்களை பரிமாறி கொள்ள முடியுமா? ஜோஹோவில் உள்ளவர்களால் இந்த படங்களை அணுக முடியுமா? தயவுசெய்து நேரடியாக பதில் தரமுடியுமா?'' என்று கேள்வி கேட்டு இருந்தார்.
இதற்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛நான் இதுபற்றி தெளிவாக கூறியிருக்கிறேன். எங்களின் முழுமையான SAS வணிகமும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. வாடிக்கையாளர்களின் தரவை நாங்கள் ஒருபோதும் அணுகுவது இல்லை. இதற்காக ‛எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்' என்ற ஒரு தொழில்நுட்பம் வருகிறது. நம்பிக்கை என்பது விலைமதிப்பற்றது. சர்வதேச சந்தையில் இந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம். எங்கள் நிறுவன தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையை அனைத்து இடங்களிலும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ‛அரட்டை' செயலியில் ‛எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்' அம்சம் வருகிறது. இதனால் இருவருக்குள் நடக்கும் சாட் மற்றும் போட்டோ, வீடியோ பரிமாற்றத்தால் மற்றவர்களால் அணுக முடியாது என்பதை ஸ்ரீதர் வேம்பு உறுதியாக உள்ளார். முன்னதாக இதுபற்றி ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணி வேம்பு இதுபற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதுபுற்றி அவர்,‛‛வாட்ஸ்அப் போன்று ‛எண்ட்-டு எண்ட் என்க்ரிப்ஷன்' அம்சம் ‛அரட்டை' செயலியில் கொண்டு வரப்படும். இதற்காக பணியாற்றி வருகிறோம். இதனால் தனிப்பட்ட நபர்களின் உரையாடல், போட்டோ வீடியோ பகிர்வு உள்ளிட்டவை பாதுகாக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications