சினிமாவில் என்ட்ரி? ராமராஜன் முன்பு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு போன ஆஃபர்! ரோலை பாருங்க
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக சண்டை பயிற்சியாளரும், தயாரிப்பாளருமான ஜாக்குவார் தங்கம் நடிகர் ராமராஜனை அருகே வைத்து கொண்டு கூறிய வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் ஜெயக்குமார் அரசியலில் இருந்தபடியே சினிமாவிலும் ‛என்ட்ரி' கொடுக்கிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் டி ஜெயக்குமார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இவர் சென்னை ராயபுரம் தொகுதியில் 1991, 2001, 2006, 2011, 2016 என்று 5 முறை எம்எல்ஏவாக இருந்தார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் டி ஜெயக்குமார் தோல்வியடைந்தார். ஆனாலும் கூட அதிமுக விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அடிக்கடி ஜெயக்குமார் தான் பேசி வருகிறார்.
இந்நிலையில் தான் சென்னையில் எதார்த்தமாக இன்று அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் ராமராஜன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசி கொண்டனர். அப்போது சினிமா தொடர்பாக அவர்கள் பேசினர். அப்போது ஜாக்குவார் தங்கம், ‛‛நான் ஒரு படத்தில் ஹீரோவா நடிக்கிறேன்'' என்று கூறினார். அதை கேட்டதும் ஜெயக்குமார், ‛‛என்னையும் ஒரு படத்தில் ஹீரோவா சேர்த்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
அதற்கு ராமராஜன், ‛‛நீங்கள் ம் சொல்லுங்கள். நானே படத்தை இயக்குறேன்'' என்றார். அப்போது ஜாக்குவார் தங்கம், ‛‛என் படத்தில் வாத்தியார் ரோல் இருக்கு.. பண்றீங்களா?'' என்று ஜெயக்குமாரை நோக்கி கேட்டார். அதற்கு ஜெயக்குமார், ‛‛நீங்கள் சொன்னீர்கள் என்றால் கண்டிப்பாக வருகிறேன்'' என்று கூறினார்.
இதையடுத்து ஜாக்குவார் தங்கம் மற்றும் ஜெயக்குமார் கைக்குலுக்கினர். அப்போது ஜெயக்குமார் சிரித்தார். அதற்கு ஜாக்குவார் தங்கம், ‛‛உண்மையாகவே ரோல் இருக்குங்க.. சீரியஸாக தான் சொல்கிறேன்'' என்றார். அதற்கு ஜெயக்குமார், ‛‛சீரியஸாக தான் சொல்றீங்களா?'' என கூறிவிட்டு புறப்பட தயாரானார். அப்போது அருகே இருந்தவர்கள் கால்ஷீட் கன்பார்மா? என கேட்க ஜெயக்குமார், ‛‛கால்ஷீட் கன்பார்ம்ட்'' எனக்கூறிவிட்டு ஜாக்குவார் தங்கத்திடம் கைக்குலுக்கிவிட்டு, ராமராஜனிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தமிழகத்தை எடுத்து கொண்டால் அரசியல்வாதிகளுக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சினிமாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் நடித்துள்ளனர். இதுதவிர நடிகர்களாக இருந்த விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், கார்த்திக், விஜய் என பலரும் அரசியல் கட்சியை தொடங்கினர். இவர்கள் தவிர பல நடிகர், நடிகைகள் எம்எல்ஏ, எம்பிக்களாக பொறுப்பு வகித்துள்ளதோடு, கட்சி பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.
அதிமுக ஜெயக்குமார் தீவிரமாக எம்ஜிஆர் ரசிகர். இவர் கட்சி மேடை உள்பட பல்வேறு மேடைகளில் எம்ஜிஆர் பாடலை மைக்கில் பாடியுள்ளார். இப்போது டி ஜெயக்குமார், ராமராஜன், ஜாக்குவார் தங்கம் இடையே நடந்த மேற்கூறிய உரையாடல் ஜாலியாக தான் நடந்தது. ஜெயக்குமாரை பொறுத்தவரை அவர் அரசியலில் தான் தொடர்ந்து செயல்படுவதில் உறுதியாக உள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் ‛ஓகே' சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications