2024.. இந்தியாவுக்கே “லாஸ்ட் சான்ஸ்”.. சிந்தித்தால் பிழைக்கும்! ஜேம்ஸ் வசந்தனின் அவசர எச்சரிக்கை
2024ல் இந்தியாவுக்கே பொதுவான மிக முக்கிய விசயம் என்றால் அது தேர்தல் மட்டும்தான். அதை குறிப்பிட்டே ஜேம்ஸ் வசந்தன் இவ்வாறு பதிவிட்டதாக தெரிகிறது.
சென்னை: 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்றும் சிந்தித்தால் பிழைப்போம் எனவும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்தே அவர் இவ்வாறு பதிவிட்டு உள்ளார் என்று பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. மோடி 2 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்.
2024 ஆம் ஆண்டுடன் அவரது ஆட்சிகாலம் நிறைவடையும் நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்படலாம். இந்த் நிலையில் இப்போதே இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி இருக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தல்
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பெரும் கூட்டணியை அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. அதேபோல் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி தொடர்பாக இப்போதே பேசத்தொடங்கி உள்ளது. அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் இப்போதே தொடங்கி உள்ளது.

குற்றச்சாட்டுகள்
ஜாதி, மதவாத மோதல்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மீதான தாக்குதல்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கும்பல் படுகொலைகள், பசுக்களின் பெயரில் நடைபெறும் படுகொலைகள், டெல்லி கலவரம், புல்டோசர்களில் வீடு இடிப்பு, பண வீக்கம், வேலையிழப்பு, தனியார்மயமாக்கள், அதானி விவகாரம், கொரோனா மரணங்கள் என மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

எதிர்க்கட்சிகள்
குறிப்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களை மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற நிறுவனங்கள் மூலம் குறிவைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜேம்ஸ் வசந்தன் கருத்து
இந்த நிலையில்தான் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் 2024 குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "2024 இந்தியாவுக்குக் கொடுக்கப்படுகிற இறுதி வாய்ப்பு. சிந்தித்தால் பிழைக்கும்; இல்லையேல்..!" என்று குறிப்பிட்டு உள்ளார். 2024ல் இந்தியாவுக்கே பொதுவான மிக முக்கிய விசயம் என்றால் அது தேர்தல் மட்டும்தான். அதை குறிப்பிட்டே ஜேம்ஸ் வசந்தன் இவ்வாறு பதிவிட்டதாக தெரிகிறது.

மக்கள் கருத்து
அவரது பதிவுக்கு கீழே ஏராளமான பேஸ்புக் பயனர்கள், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்திட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications