ஜனநாயகன் விவகாரம்.. சென்சார் சான்றிதழ் நடைமுறையில் மாற்றம் வேண்டும்.. சீனுக்குள் வந்த கமல்ஹாசன்!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியத்தில் சான்றிதழ் அளிக்க இழுத்தடிக்கப்பட்டு வரும் சூழலில், அது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சென்சார் பிரச்சனை என்பது ஜனநாயகன் படத்திற்கானது மட்டுமல்லாமல், கலை மற்றும் கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்துரிமையை பாதிக்கக்கூடியது என்றும் கூறியுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. சென்சார் சான்றிதழ் கோரி டிசம்பர் 18ஆம் தேதியே விண்ணப்பித்துவிட்ட சூழலிலும், சென்சார் தரப்பில் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸாவதற்கு 4 நாட்களுக்கு முன் மீண்டும் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்புவதாக படக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஜனநாயகன் படக்குழு நீதிமன்ற படியேறிய போது, ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் இந்தியா முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரையரங்க உரிமையாளர்கள் திரும்ப கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதேபோல் நீதிமன்றம் யு/ஏ சான்றிதழ் அளித்த போது, சென்சார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சென்சார் தரப்பில் கூடுதல் சொலிஷிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதாடியது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக திரைத்துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராஜ்ய சபா எம்பியும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் கமல்ஹாசன், சென்சார் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. கருத்து சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டமே உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கானது மட்டுமல்ல. கலை, கலைஞர்களுக்கு அரசியலமைப்பு ஜனநாயகம் வழங்கியுள்ள ஒட்டுமொத்த கருத்துரிமையை பாதிக்கக் கூடியது. சினிமா என்பது தொழிலாளர்களின் தனிப்பட்ட உழைப்பால் உருவாகுவது மட்டும் கிடையாது.
எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என்று பல்வேறு துறையினரின் வாழ்வாதாரம் சார்ந்தது. அதனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் நேர்மையான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய நடைமுறை தேவை. தெளிவான நடைமுறை இல்லை என்றால் படைப்புகள் பாதிக்கப்படும். அது பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும்.
தமிழ்நாடு, இந்திய சினிமா ரசிகர்கள், கலைகள் மீது பெரும் ஆர்வமும், புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டவர்கள். தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஒன்றிணைந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரன், உரிமைகளை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான சீரமைப்பு நடவடிக்கை எடுக்க அது உதவும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications