Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை எதிர்த்தே ஆட்சியைப் பிடித்த அஇஅதிமுக, எம்ஜிஆரின் திடீர் மறைவுக்குப் பின் ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரினார் ஜானகி ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி பதவிக்கு வற்புறுத்தி அழைத்து வரப்பட்டார். அவ்வாறே பேச்சுகள் ஊடகங்களில் அடிபட்டன. அவரை ஆதரித்தவர்கள் 'இது அவர் எடுத்த சொந்த முடிவு' என்றனர். முதல் அமைச்சராகப் பதவியேற்ற பிறகு பேட்டி அளித்த ஜானகி, "கட்சி சிதறக்கூடாது என்ற காரணத்தால் கட்சிப் பொறுப்பை ஏற்றேன்" என்றார்.

Janaki sought Karunanidhi s support to save her position Dissolution of the Government in 1988 Jayalalithaa s Vow

ராஜீவ் காந்தியின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பதாக அரசியல் கணிப்புகள் வெளியாகின. அதை உண்மையாக்கும் விதமாக ஜனவரி 30 ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு ஜானகியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

போலி கைரேகை சர்ச்சை

அதிகாரத்தை இழந்தபிறகு "பதவியேற்றது என் சொந்த முடிவு அல்ல; கட்சி விசுவாசிகள் பலரும் என் தலைமைதான் கட்சி உடைவதைக் காப்பாற்றும் என்றனர். எம்.ஜி.ஆரின் லட்சியங்களை நிறைவேற்றப் பயன்படும் என்றனர். அந்த வார்த்தைகள் என்னை வரத் தூண்டின" என்று புது உரை எழுதினார்.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை ஜானகிக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையே இருந்ததில்லை. அதை அவரே ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் அவரது உடல் ராமாபுரம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே இரவோடு இரவாக அவரது கைரேகைகளை ஜானகி தனக்கு சாதகமான ஆவணங்களில் பதிவு செய்துகொண்டார் என ஒரு வதந்தி அன்று பரவியது.

அது குறித்து அவர் தன் பேட்டியில் விளக்கம் அளிக்க முன்வந்தார். "அன்று இரவு அடுத்த நாள் நிகழ உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத் திறப்பு விழா பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். படுக்கப் போகும் முன் பசிக்கிறது என்றார். வழக்கமாக இரவில் பார்லி கஞ்சி கேட்பார். அதையே கொடுத்தோம். பின் படுக்கைக்குப் போனார். உடனே நெஞ்சு வலியை உணர்வதாகச் சொன்னார். பின்னால் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர்" என்று விளக்கி இருந்தார் ஜானகி.

மருத்துவமனையில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்தபோது ஜானகி உணர்வு வயப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் உணரவே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து உறங்க வைத்துவிட்டனர். எனவே பின்னால் நடந்தவை எதுவும் எனக்குத் தெரியாது என்றும் நா கூசாமல் இப்படி வதந்தி பேசுகிறார்கள் என்றும் ஆதங்கப்பட்டார் அவர்.

எம்.ஜி.ஆரின் சடலம் இருந்த பீரங்கி வண்டியில் ஜெயலலிதா ஏறியபோது நடந்த சம்பவம் பற்றிய கேள்விக்கு அவர், 'அப்படி நடந்தது துரதிருஷ்டமான ஒன்று' என்றார். மு.கருணாநிதியின் சிலையும் அவரது தொண்டர்களால் உடைக்கப்பட்டது. "அது வருத்தப்பட வேண்டிய நிகழ்ச்சி. மீண்டும் கலைஞர் சிலையை நிறுவ அதிமுக உதவும் என்று அறிவித்தோம். அதற்குக் கலைஞர் மறுத்துவிட்டாரே, என்ன செய்வது" என விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஜானகி 97 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வரானார். அவரை இ.காங்கிரஸ் ஆதரிக்கும் என அவர் நம்பினார். ஆனால், காங்கிரஸ் முறையான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றதால், உறவில் விரிசல் விழுந்தது. ஜானகி, முறைப்படி ராஜீவ்காந்தியைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பு பற்றி, "இன்னும் இரண்டாண்டுகளுக்கு உங்கள் தலைமையிலான அமைச்சரவையே தொடரட்டும். நாங்கள் அதற்கு முழு ஆதரவும் தருகிறோம். கவலைப்படாதீர்கள்" என்று வாக்குறுதி அளித்ததாக ஜானகி கூறினார்.

நெருப்பில்லாமல் புகையுமா?

நாட்டின் பிரதமரே வாக்களித்துவிட்டாரே என நம்பி இருந்தார் ஜானகி. ஆயினும் காங்கிரஸ் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதற்கு ஜானகி சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசியதாக பேச்சு அடிபட்டது. 'ஆதரவு தருவோம் எனக் கூறியபின் எதற்கு விலை பேச வேண்டும்' என்றார் ஜானகி.

ஆனால், இந்த விஷயத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்ற கதையாக இ.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, ஜானகிக்கு ஆதரவாகப் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர். அது உட்கட்சி பூசலால் நேர்ந்தது எனச் சமாதானம் சொன்னார் ஜானகி. இதனால் இ.காங்கிரசுக்கும் அதிமுகவும் எதிரும் புதிருமான திசைக்கு நகர்ந்தன. திமுக தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியே அதிமுகவை ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவின் ஆதரவைச் சட்டசபையில் ஜானகி கோரிய விநோதமும் அரங்கேறியது.

அதற்கு ஜானகி, "படகு கரை சேர்ந்துவிடும் என்று முழு நம்பிக்கையுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று படகைக் கவிழ்த்துவிடுகிறார்கள். நாம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நிலையில் எதிரில் இருப்பது எதுவாக இருந்தாலும் பிடித்துக் கொண்டு கரையேறவே முயற்சி செய்வோம். அப்போது எதிரில் இருப்பவர் எதிரியா? நண்பரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்நிலையில்தான் நாங்கள் திமுகவின் ஆதரவை நாடினோம். அதுவும் எம்.ஜி.ஆரின் அரசு துரோகத்தால் கவிழ்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் நாடினோம்" என்று புதிய அரசியல் சூத்திரம் பேசினார் ஜானகி.

ராமாபுரத்தைக் கைப்பற்றுவேன்

ஜானகி நாகரிகமாகத் தனது பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத சூழல் எழுந்தபோது அவர் பதவியைத் துச்சமாகத் தூக்கி எறிந்திருக்கவேண்டும் என எம்.ஜி.ஆர் விசுவாசிகள் கூறினர். அதுவரை அதிமுகவைக் கைப்பற்றுவேன் என மேடைகளில் முழங்கிவந்த ஜெயலலிதா, "ராமாபுரம் தோட்டத்தை ஜானகியிடமிருந்து மீட்பேன்" என்று சவால் விடுத்தார். ஜானகி தன் தரப்பு தொண்டர்களை வசவு வார்த்தைகளை மேடைகளில் பேசுவதைத் தவிர்க்கக் கோரினார்.

ஜானகி இடைக்கால ஆட்சியில் சில சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கும் மதுக்கடைகளுக்கும் வழங்கப்பட்ட அனுமதியில் முறைகேடு நடந்ததாகப் பூதம் கிளம்பியது. ஆட்சி நீடிக்கும் என ராஜீவ் உத்தரவாதம் அளித்ததால் கையொப்பம் இட்டேன் என அப்பாவியாகக் கூறினார் ஜானகி. தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜானகி அணி 4ஆவது இடத்தையேப் பிடிக்கும் என முடிவு கிடைத்தது.

ஜானகி போட்டிடும் தொகுதியில் அவரை எதிர்த்துத் தானே நிற்பேன் என ஜெயலலிதா அறிவித்தார். "நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்பதில் அந்த அம்மாள் எப்படி அத்தனை நம்பிக்கையோடு இருக்கிறார் என்பது புரியவில்லை" என்றார் ஜானகி. நெடுஞ்செழியன் 'ஜெ'அணியிலிருந்தார். அவரை 'ஜா' அணியினர் அழைத்தனர். ஜெயலலிதா வந்தால் ஏற்பீர்களா? என ஜானகியையே கேட்டனர் செய்தியாளர்கள். "அவர் மட்டும் விதிவிலக்கா? கட்சி சிதறிப்போகக் கூடாது என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன். பதவி ஆசையால் அல்ல. ஆகவே ஜெயலலிதாவை மட்டும் எப்படி ஒதுக்க முடியும்? அவரும் ஒன்றாக இணைவதையே விரும்புகிறேன்" என்றார் ஜானகி.

எழுதியவர்: கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+