தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன?
சென்னை: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் அஇஅதிமுக பிரிந்து செயல்பட்ட போது அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இனி அதிமுகதான் ஆளும் கட்சி; நிரந்தர முதல்வர் எம்.ஜி.ஆர் தான் என நம்பிக் கொண்டிருந்த ரத்தத்தின் ரத்தங்களின் நம்பிக்கையில் திடீரென்று காலன் ஒரு இடியை இறங்கினான். 1987 டிசம்பர் 24 ஆம் தேதி மருதூர் கோபால ராமச்சந்திரன் மறைந்தார்.
'லாஸ் ஏஞ்சல் டைம்ஸ்' செய்திப்படி அவரது இறுதிச் சடங்கில் குவிந்த கூட்ட நெரிசலைச் சமாளிக்க காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் உயிரிழந்தனர் என்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் கமிஷனர் வில்சன் தேவாராம் சொன்னார். தங்களின் வழிகாட்டி இழந்த சோகத்தில் சுமார் 10 தொண்டர்கள் உயிரை மாய்த்தும் கொண்டனர். மற்றொரு பக்கம் எம்.ஜிஆர். இறந்தால் நானும் இறந்துவிடுவேன் என்று கோவி மணிசேகரன் பேசிய கருத்து பின்னாளில் நகைப்புக்குள்ளானது.

கூட்டத்தைச் சமாளிக்கப் பாதுகாப்பு வசதிக்காக வேண்டி 3,500 காவலர் படை குவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கில் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றனர் எனக் கணக்கிடப்பட்டது. தொலைக்காட்சியில் வெளியான காட்சிகளில் மக்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறினர். கடல் அலைபோல் மக்கள் வெள்ளம் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்து செல்ல முடியாமல் முட்டிமோதியது.
குவிந்த ஒரு மில்லியன் மக்கள்
1969இல் அண்ணா மறைந்தபோது ஒன்றரைக் கோடி மக்கள் தலைநகரில் குவிந்தனர். காமராஜர் மறைந்தபோது கூடியவர்களின் தொகை 20 லட்சம். தென்மாவட்டங்களிலிருந்து பயணித்தவர்களில் விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர். 'வாஷிங்டன் போஸ்ட்' 'இந்தியாவின் பிரபலமான தலைவர் மறைந்தார்' என்று எழுதியது. "மனிதாபிமானத்தின் மொத்த உரு மறைந்துபோனது; தமிழகம் ஏழையாகவிட்டது" எனத் தலையங்கம் தீட்டியது 'கல்கி'. பலர் 'கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் ஓய்ந்துபோயின' என்றும் சொன்னார்கள். அவர் படங்கள் சினிமா ரசனையை உயர்த்தவில்லை.
ஆனால், சுய ஒழுக்கத்தை ஆயிரக் கணக்கான நெஞ்சங்களில் அவர் விதைத்தார். மனித உணர்ச்சியில் வீரம் வலிமையான குரலாக வீரத்தைக் காட்சிப்படுத்தினார். திமுக 'திராவிட அரசியல்' என்ற கருத்தாக்கத்தைக் கூர் தீட்டி வந்த வேளையில், அவர் தேசிய இயக்கத்தின் மாற்று வடிவமாகத் தமிழக அரசியலை வழிநடத்தினார். அ.இ.அ.தி.மு.கவின் வருகை தமிழ்நாட்டில் தேசிய கட்சியின் ஆட்சியை முற்றாக முடக்கியது.
எம்.ஜி.ஆரின் அறிவிக்கப்படாத அரசியல் வாரிசாக அவரது தொண்டர்களால் ஜெயலலிதா பார்க்கப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், தற்கால முதல்வராக அவரது மனைவி ஜானகியைப் பதவியேற்கச் செய்தனர். கட்சி இரண்டு அணிகளாக உடைந்தது. அதற்கு முறையே 'ஜா' அணி 'ஜெ' அணி எனப் பெயர் சூட்டப்பட்டன. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் கூட ஜெயலலிதாவுக்கு சில தர்மசங்கடங்கள் உருவானது. அவர், வாகனத்திலிருந்து கீழே தள்ளப்பட்டார்.
மனம் நொறுங்கிப் போனார் ஜெ. அவர் 'எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க என்று தனிக் கட்சித் தொடங்க உள்ளதாக ஊகங்கள் உலாவின. அப்படி நடந்தால் கட்சியை உடைத்த பழி பாவத்திற்கு ஆளாகக்கூடும் என்றும் அவருக்குச் சிலர் அறிவுரை கூறினர். கட்சிக்குள் இருந்தபடியே போராடி அதைத் தனதாக்கிக் கொள்ள முயல்வதே சமகால யுக்தி. அதற்கு முன்கூட்டியே வி.பி. சிங் வழிகாட்டி இருந்தார். அதேவேளையில் திமுகவில் கலக நாயகனாகச் செயல்பட்டு வந்த நெடுஞ்செழியன் பின் எம்.ஜி.ஆர் கட்சியில் போய் அமைச்சராக தன் அரசியல் வாழ்வைத் தக்கவைத்து வந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகியை எதிர்க்கத் துணிந்தார் நெடுஞ்செழியன். அதைப் பலர் விமர்சித்தனர். சட்டமன்ற உறுப்பினர்களை அவர் சுதந்திரமாக முடிவு செய்யவிடாமல் தடுத்துவிட்டார் என்றனர்.
முதல் பெண் முதல் அமைச்சர்
எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதாவுக்கு அவமானம் ஏற்பட்டதற்காக மாதர் சங்கம் கூட ஒரு பெண் அரசியல்வாதிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நடந்த சம்பவம் நாகரிகமற்றது என சில பத்திரிகைகள் உரைத்தன. ஜானகி, "நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கெட்ட கனவாக மறந்து ஒன்று சேர்வோம்" என அறிக்கை வெளியிட்டார். அவருக்குச் சட்டசபையில் கட்சித் தலைமையைப் பிடித்துவிட்ட தைரியம் இருந்தது, ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய் பலவீனம் அடைந்துவிடுவோமோ என அச்சம் இருந்தது.
இதற்கு மாறாக, "ஆட்சி போனாலும் பரவாயில்லை; அதிமுக கட்சிதான் முக்கியம்" என்று அறைகூவல் விடுத்தார் ஜெயலலிதா. கட்சியைக் கைப்பற்றிவிட்டால், ஆட்சி தானாக மடியில் வந்து அமரும் என்பது அவர் கணிப்பாக இருந்தது.
ஜானகி சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பே அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார். அது சரியா? என விவாதம் எழுந்தது. சட்டப்படி முதல்வராகப் பொறுப்பேற்ற ஒருவர் அமைச்சரவையை அறிவிக்கலாம் என்றும் பெரும்பான்மை என்பது அவர் எதிர்க்கட்சிகளையும் சேர்த்து அரவணைத்துச் செல்லும் ஆற்றலை உள்ளடக்கிய விஷயம் என்று கூறப்பட்டது. எது எப்படியே வரலாற்றில் முதன் முறையாகப் பெண் ஒருவர் முதலமைச்சர் ஆனார். அவர் பெயர் ஜானகி எனப் பதியப்பட்டது.
மற்றொரு பக்கம் அவர் தலைமை பதவியை அடைந்த விதம் வேதனையாக அமைந்துவிட்டதால் முதல் பெண் முதல்வர் என்பதே சாதனையாகிவிடாது என்றன எதிர்க்கட்சிகள்.
ஆட்சியிலிருந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் எம்.ஜி.ஆர் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா தொற்று என்றே விளக்கம் அளிக்கப்பட்டது. வேறு செய்திகளோ அவருக்குச் சிறுநீரக பழுது என்றன. எனவே மாற்றுச் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்குத் தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். இதே அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் இந்திராகாந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு பக்கம் இந்திரா காந்தியை இழந்த இந்தியா, மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆரை இழந்த தமிழ்நாடு என இந்திய அரசியலில் ஒரு மாபெரும் பள்ளம் ஏற்பட்டிருந்தது.
எழுதியவர்: கடற்கரய்
-
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன்












Click it and Unblock the Notifications