ஜெயலலிதா விட்டிருக்கவே மாட்டார்.. களமிறங்கிய படை.. ஈரோடு கிழக்கு.. புட்டு புட்டு வைக்கும் புள்ளி!
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை எந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி ஜெயிப்பதை விடவே மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி - ஓபிஎஸ் பஞ்சாயத்து, கூட்டணி பிரச்சனை, அண்ணாமலை நிலைப்பாடு என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கப்படுவதை பற்றி யாரும் பேசவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் மணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.
அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். இன்னொரு பக்கம் பாஜக இந்த தேர்தலில் வேட்பாளரை களமிறக்குமா, இறக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில்தான் இடைத்தேர்தல்களில் பணம் கொடுப்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், பொதுவாக இடைத்தேர்தல்களில் பணம் கொடுப்பது போன்று நடக்கும் கேலிக்கூத்துகள் ஜனநாயகத்திற்கு நல்லது கிடையாது. அதனால்தான் சமயங்களில் பெரிய கட்சிகள் கூட இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது இல்லை. இடைத்தேர்தல்களில் வெல்லும் கட்சிகள் பொதுத்தேர்தல்களிலும் வெல்லும் என்பதில் உறுதி இல்லை. 2006 - 2011 இடைப்பட்ட காலத்தில் பல இடைத்தேர்தல்களில் கருணாநிதி வென்றார். நினைவு சரியாக இருந்தால் 11 இடைத்தேர்தல்களில் கருணாநிதி வென்றார். ஆனால் 2011ல் திமுக படுதோல்வி அடைந்தது. 23 இடங்களில் மட்டும் வென்று சட்டசபையில் எதிர்க்கட்சி கூட ஆக முடியாத நிலை ஏற்பட்டது. 5 வருடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததுதான் பிரச்சனை.

இடைத்தேர்தல்
அந்த இடைத்தேர்தல்களில் ஒரு 5-6 இடங்களில் தோல்வி அடைந்து இருந்தால் கூட ஏன் தோற்றோம் என்று தெரிந்து இருக்கும். இதன் மூலம் 2011 சட்டசபை தேர்தல்களில் தவறுகளை சரி செய்து போட்டியிட்டு இருக்கலாம். ஆனால் எல்லா ஆளும் கட்சிகளும் என்ன செய்கிறது. ஏதாவது செய்து இடைத்தேர்தலை வென்றுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். நாம் எடப்பாடி - ஓபிஎஸ் பஞ்சாயத்து, கூட்டணி பிரச்சனை, அண்ணாமலை நிலைப்பாடு என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் தேர்தலுக்கு பணம் கொடுக்கப்படுவதை பற்றி யாரும் பேசவில்லை.

தேர்தலுக்கு பணம்
தேர்தலுக்கு பணம் கொடுப்பதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை. ஆனால் அதைப்பற்றி யாருமே பேசுவது இல்லை. 2002- 2003 காலகட்டத்தில் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, சாத்தான்குளம் இடைத்தேர்தல்களில் நான் களநிலவரத்தை பார்த்து இருக்கிறேன். சாத்தான் குளம் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஆதரவு கொடுத்ததும் அங்கு அதிமுக வென்றது. அங்கே ஜெயலலிதாவே பிரச்சாரத்திற்கு சென்றார்கள். அங்கே பணம் அதிகம் விளையாடியது என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு அடுத்து நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

திருமங்கலம் பார்முலா
திருமங்கலம் பார்முலா என்று சொல்கிறார்களே.. அதற்கு முன்னோடியே காஞ்சிபுரம் பார்முலாதான். காஞ்சிபுரம் பார்முலா, கும்மிடிப்பூண்டி பார்முலாவை கொண்டு வந்தது ஜெயலலிதா. இந்த பார்முலாக்கக்களை அறிமுகப்படுத்திய மூல வேர் ஜெயலலிதா. அதை திமுகவும் பின்பற்றியது. ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் எப்படி வென்றார். அந்த பார்முலா தெரியுமா? ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை எந்த இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி ஜெயிப்பதை விடவே மாட்டார். அதுதான் அவரின் பார்முலாவாக இருந்தது. ஜெயலலிதா மரணத்திற்கு பின் 23 தொகுதியில் 13 தொகுதியில் திமுக வென்றது என்பது மினி பொதுத்தேர்தல் போன்றது. மற்றபடி இடைத்தேர்தல்களில் ஆளும் கூட்டணிதான் வென்றுள்ளது. மற்றபடி பொதுத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பாக அமைச்சர்கள் களமிறக்கப்படுவார்கள். பெரிய டீம் இறக்கப்படும். போலீசார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். இதுதான் இதுவரை நடந்த வரலாறு.

பழக்கப்பட்டுவிட்டனர்
மக்களும் இதற்கு பழக்கப்பட்டுவிட்டனர். எவ்வளவு காசு கொடுப்பார்கள் என்று மக்களும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி காசு கொடுப்பதாக புகார் கொடுக்க போகிறார்கள். இதுவரை நடக்காதது போல காசு கொடுக்க போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் புகார்கள் கொடுக்க போகின்றன. அடித்து சொல்கிறேன் பிப்ரவரி 27ம் வரை அரசியலில் இதுதான் புகாராக வைக்கப்படும். அதிமுக, திமுக இரண்டையும்தான் குற்றஞ்சாட்டுகிறேன்.

ஈரோடு கிழக்கில் தேர்தல்
ஈரோடு கிழக்கில் தேர்தல் முடிவில் நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சி சார்பாக ஒட்டுமொத்த படையே இறக்கப்படும். அது எதிர்க்கட்சி கோட்டையாக இருந்தாலும் ரிசல்ட் தலைகீழாகவே வரும். இந்த தேர்தல் ஒரு சடங்கு அவ்வளவுதான். கடந்த 20 வருடமாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகள் எப்படி நடந்து கொண்டதோ அப்படித்தான் இப்போதும் நடக்கும். அமைச்சர்கள் எல்லோரும் இங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர். அப்படி என்றால் பிரஷர் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications