ஜெகதீஸ்வரி அப்படிக் கேட்டதுமே.. 24 மணி நேரத்தில் பெண்களுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?
சென்னை: பெண்களுக்கு ஆபத்து என்றால் யாரிடம் உதவி கேட்பது? எந்த நம்பருக்கு போன் செய்வது? அரசு தரும் உதவிகளை எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கெல்லாம் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது அல்லவா.. இதை மனதில் வைத்துத்தான் தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி. மத்திய அரசின் மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழி சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதற்கு பதிலும் கிடைத்துள்ளது.. அதை பற்றி பார்ப்போம்..!!
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மாநாட்டில் தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி பங்கேற்றார்.

அப்போது பேசும்போது, பெண்கள் பாதுகாப்பு, அவசர உதவி மற்றும் பல்வேறு நலச் சேவைகளை மக்கள் எளிதாக அணுகுவதற்கு அவர்களின் தாய்மொழியில் சேவைகள் கிடைப்பது அவசியம்.. தாய்மொழியில் தகவல்களும் வழிகாட்டுதல்களும் கிடைத்தால் மட்டுமே தொழில்நுட்பச் சேவைகள் உண்மையான பயனை அளிக்கும்..
ஜெகதீஸ்வரி மத்திய அரசுக்கு நன்றி
குறிப்பாக அவசரகால சூழல்களில் மொழித் தடை இருந்தால் உதவி பெறுவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ் மொழி இணைப்பு மிகவும் முக்கியமானது.. அந்தவகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும்" அந்த மாநாட்டிலேயே கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதுடன், 24 மணி நேரத்துக்குள் செயலியில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டது. இதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். தாய்மொழியில் தொழில்நுட்ப சேவைகள் கிடைப்பது பெண்களின் பாதுகாப்பையும், அரசு நலத் திட்டங்களை எளிதாக அணுகும் வாய்ப்பையும் மேம்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் கோரிக்கையும், அதற்கு மத்திய அரசு உடனடியாக எடுத்த இந்த நடவடிக்கைதான் பெண்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது,.
மிஷன் சக்தி திட்டம் என்றால் என்ன
மிஷன் சக்தி திட்டம் என்றால் என்ன தெரியுமா? பெண்களின் பாதுகாப்பு, நலன், முன்னேற்றத்துக்காகச் செயல்படும் மிஷன் சக்தி திட்டத்தில் "சம்பல்", "சமர்த்யா" என 2 பிரிவுகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் சம்பல் பிரிவின் நோக்கம்... பெண்களின் முன்னேற்றம், தங்குமிடம், குழந்தைப் பராமரிப்பு உள்ளிட்ட உதவிகள் சமர்த்யா பிரிவில் இடம்பெறுகின்றன.
பெண்கள் உதவி எண் 181 மூலம் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி பெறலாம். உடனடி அவசர உதவிக்கு 112 எண்ணையும், ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் தொடர்பாக 1098 எண்ணையும் அழைக்கலாம்.
மேலும், "சக்தி சதன்" திட்டம் ஆதரவற்ற பெண்களுக்குத் தங்குமிட உதவி வழங்குகிறது. "சகி நிவாஸ்" வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தங்குமிடத் திட்டம். "பால்னா" குழந்தைப் பராமரிப்பு வசதிகளை வழங்குகிறது.
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு விதிமுறைகளின்படி நிதியுதவி வழங்கப்படுகிறது. "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்" திட்டமும் இதில் இடம்பெறுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள எல்லா சேவைகளும் செயலியிலேயே கிடைக்கும் என்று அர்த்தமில்லை. சில உதவிகளைப் பெற சம்பந்தப்பட்ட மையங்களை அணுக வேண்டியிருக்கும்.
அரசுத் திட்டங்கள் இருந்தும், அவற்றைப் பற்றிய தகவல்கள் புரியாததால் பலரும் பயன்படுத்தத் தயங்குகிறார்கள்.. அந்தத் தடையைக் குறைக்கத் தாய்மொழியில் தகவல்கள் கிடைப்பது உதவியாக இருக்கும். அந்த வகையில், மிஷன் சக்தி செயலியில் தமிழ் சேர்க்கப்பட்டிருப்பது தமிழ்நாடு, புதுச்சேரி மக்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பது இனி தெரியவரும்..
சர்ச்சைகளை கடந்து அதிரடி
அமைச்சர் ஜெகதீஸ்வரியை பொறுத்தவரை, சர்ச்சைகளில் சிக்கிய தவெக அமைச்சர்களில் இவரும் ஒருவர்.. இதனால் விஜய், இவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் கசிந்தன.. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை..
கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்த வெற்றிப் பயணத் திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இப்போது டெல்லி மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களின் பயன்பாட்டுக்காக மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 24 மணி நேரத்துக்குள் அதையும் நிறைவேற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
