ரிசல்ட் வரும் முன்பே தவெக பக்கம் சாயும் காங்கிரஸ்.. ஜோதிமணி ட்வீட்டை பாருங்க
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. வருகிற 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்படவுள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுகவும் முயற்சி செய்துள்ளனர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் போராடியுள்ளனர். தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே காங்கிரஸ் தவெக பக்கம் சாய தொடங்கியுள்ளது. அந்தக் கட்சியின் எம்பி ஜோதிமணி தவெகவுக்கு மறைமுக ஆதரவுடன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மலையேறும் காங்கிரஸ்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முடிவில் இறங்கியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் காங்கிரஸ் மீண்டும் மலையேற தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவை பொறுத்து முக்கிய முடிவை எடுப்போம். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துடன் தான் இருப்போம். இனி நடுநிலை வகிக்க மாட்டோம் என்று கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். சோடங்கரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக பக்கம் சாய்கிறதா காங்கிரஸ்
தேர்தலுக்கு முன்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில நிர்வாகிகள், தவெகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்து கூறி வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தான் ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் பிரச்சாரம் செய்யவில்லை.
வாக்கு எண்ணிக்கை வருவதற்கு முன்பாகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் விரிசல்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. தேர்தலுக்கு முன்பிருந்தே ஜோதிமணி தவெக மற்றும் விஜய்க்கு ஆதரவாக இருந்து வந்தார். அந்த நிலை தற்போதும் தொடர்வது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக கணிசமான வாக்குகள், சீட்டுகளை பெற்றால் காங்கிரஸ் அவர்கள் பக்கம் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெக பக்கம் சாய்கிறதா
தவெகவுடன் இணைந்து அடுத்தாண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லி தலைமைக்கு கருத்து கூறி வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஜோதிமணி, இளைஞர்களின் ஆதரவு தவெகவுக்கு இருப்பதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சிலவற்றில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த நடவடிக்கைகள் திமுக நிர்வாகிகள் கோபம் மற்றும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications