கரூர் கோவில் நிலம்.. ரூ.25000 கோடி மதிப்பு! அப்படியே மக்களுக்கு..சிஎம் விஜய்க்கு நன்றி சொன்ன ஜோதிமணி
சென்னை: கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த முதலமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நன்றி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சென்றோம்.

அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
கோவில் நிலம்
தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் பிரச்சனையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டார்.
பாஜக
இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். "ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர் மக்களுக்கு பட்டா போட்டு வழங்கிவிட்டது" என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இனாம் நில ஒழிப்பு சட்டம்
உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில், அறநிலையத் துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்துக் கொண்டது.
வருவாய்த்துறை
அது மட்டுமல்லாமல், சட்டத்திற்குப் புறம்பாக, வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவுத் துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல், வருவாய்த்துறையிடம் கருத்துக் கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது. சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய்த் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு
இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல்வர் விஜய்
இந்த நேரத்தில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அண்ணன் திரு செங்கோட்டையன் அவர்களது நெடிய அனுபவம் மிகுந்த,விரைவான செயல்பாடுகளையும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பி திரு. ரமேஷ் அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாகக் கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது." என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications