பெண் யூடியூபர் புகார்! கைதான பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் சொந்த ஜாமீனில் விடுதலை!
சென்னை: பெண் யூடியூபர் கொடுத்த புகாரின் பேரில் மூத்த நிருபர் தாமோதன் பிரகாஷ் சொந்த ஜாமீனில் ஆலந்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பேட்டி அளித்திருந்தார். அதில் ஒரு பெண் யூடியூபரின் புகைப்படத்தை காட்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தாமோதரன் பேசியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் யூடியூபர் தன்னை பற்றி பொது வெளியில் உண்மைக்கு புறம்பாக ஒரு கருத்தை தெரிவித்ததாகவும் இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் யூடியூபர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS), தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், செப்டம்பர் 16-ம் தேதி காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைத்து தாமோதரன் பிரகாஷை கைது செய்தனர்.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. அதில், தாமோதரன் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டில் சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பதில் மாற்றக் கருத்து இல்லை. ஆனால் எந்த விசாரணையையும் நடத்தாமல் விளக்கம் கேட்காமல் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பத்திரிகையாளர் மன்றம் குறிப்பிட்டிருந்தது.
எனவே மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தாமோதரன் பிரகாஷை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காக ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜனவரியில் நடந்த சம்பவத்திற்கு தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறார்" என வாதம் செய்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட தாமோதரன் பிரகாஷை நீதிமன்றக் காவலில் வைக்க மறுப்பு தெரிவித்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் 15 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட நிபந்தனை விதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
