மீண்டும் திமுக ஆட்சி உறுதி.. 2வது இடம் யாருக்கு என்பதே போட்டி.. சொல்வது பத்திரிகையாளர் ராஜகம்பீரன்!
சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பின் உள்ள அரசியல் குறித்து பத்திரிகையாளர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய், சீமான் உள்ளிட்டோரால் சிதறடிக்கப்படுவதாகவும் கணித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நீக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு அக்கட்சிக்கு குறைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே தென் மாவட்டங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியது. இதனை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தே இருக்கிறார்.

இதன் காரணமாகவே மதுரையில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்பின் திண்டுக்கல்லில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த இபிஎஸ், திடீரென மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர்சூட்ட அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது அளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தென் மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகரித்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. இதுதொடார்பாக பத்திரிகையாளர் ராஜகம்பீரன் ஒன் இந்தியா யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் ராஜகம்பீரன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த குரல் புதியது அல்ல.. திருமாவளவன் கூட கூறி இருக்கிறார். ஆனால் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தான் மதுரை விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்கள். இதனால் இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. இந்த இரு கருத்து எழுந்தால், அரசு இந்த விஷயத்தை கையில் எடுக்காது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு எதற்கு என்றால், தேர்தல் அரசியலுக்காக முக்குலத்தோர் சமூகத்திற்கு விரோதி கிடையாது. என்னை வேறுபடுத்தி பார்க்காதீர்கள்.. எனக்கு ஓட்டு போடுங்கள், ஆதரவு கொடுங்கள் என்று நேரடியாக சொல்வதற்கு பதிலாகதான் எடப்பாடி பழனிசாமி இந்தவொரு அறிக்கையை வெளியிடுகிறார். இதனை அறியாத அளவிற்கு முக்குலத்தோர் சமூக மக்கள் இல்லை.
அவர்களும் இதை புரிந்து ,கொள்வார்கள். எப்படி போனாலும், இது எடுபடாத வாதம்தான். அரசியலில் தேவர் குருபூஜையை கையில் எடுத்த யாருக்கும் அது பயன் அளித்ததே இல்லை. கடந்த காலத்தில் சசிகலா இருந்ததால், ஜெயலலிதா அச்சப்படவில்லை. தற்போதைய அதிமுக சாதிக் கூறுகளாக பிளவுபட்டிருப்பதால், ஆளுக்கு ஆள் கம்பு சுத்துகிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் தராது.
அதேபோல் விஜய் இதுவரை வலிமையை நிரூபிக்காத ஒரு இடத்தில் இருக்கிறார். விஜய்யை நம்பி பயணிக்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பதால், அரசியல் அனுபவம் உள்ள யாரும் பனையூர் பக்கம் செல்லவில்லை. லெட்டர் பேட் கட்சிகள் கூட செல்லவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னாலும், யாரும் சொல்லவில்லை. அவரை நடிகராகவே பார்க்கிறார்கள்.
அவர் பின்னால் இளைஞர்கள் வலம் வருவதை கவனிக்கிறார்கள். ஒருவேளை பாஜக கூட்டணியை உடைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்துவிட்டால், ஒரு மாற்று ஏற்பாடாக விஜய்யை பார்க்கிறார். அதேபோல் தங்களை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக தேர்தலில் சில கட்சிகள் போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் விஜய் ஒரு 6வது விரலாக இருந்துவிட்டு போகலாம்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் மாதிரி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று ஏற்பாடாக விஜய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டமும் இருக்கிறது. அவர்கள் விஜய்யை நோக்கி போக மாட்டார்கள். முடிந்தவரை அங்கு இருந்து அதிகாரத்தைப் பெறவே முயற்சிப்பார்கள். ஆனால் முற்றிலும் கதவுகள் அடைக்கப்பட்டால், கடைசி ஆப்ஷனாக விஜய் இருக்கலாம்.
அதேபோல் திமுக மீண்டும் வெற்றிபெறுவதற்கான எல்லா சூழ்நிலைகளும் கணிந்துவிட்டது. திமுக ஆட்சியில் குறைபாடுகள் இல்லை என்பதை திமுகக்காரர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். திமுகவை எதிர்க்கக் கூடிய வலிமையாக கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் திமுக எதிர்க்க வலிமையான தலைவர்கள் இல்லை. திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
எல்லோரும் திமுக எதிர்ப்பை தான் பேசுகிறார்கள். சீமான், பாஜக, அன்புமணி, விஜய் என்று அனைவரும் திமுக எதிர்ப்பை பேசுகிறார்கள். இவர்கள் எல்லோரும் திமுகவுக்கு வழிவிடுகிறார்கள். 2026ல் எதிர்க்கட்சி யார் என்பதற்கு தான் போட்டி நடக்கிறது. 2வது இடத்தை பிடிக்கப் போவது யார்? தேர்தல் நடப்பது 2வது இடத்திற்காக தான்.
எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு தலைவர் என்ற இமேஜ் இல்லை. அதுதான் பின்னடைவு. அதிமுகவை முன்னிலைப்படுத்தால், பாஜகவை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்பது சிக்கல் தான். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும் கூட, அதிமுகவால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications