ஸ்பீக்கரும் அவுட், கரண்ட்டும் கட்.. அருணா ஜெகதீசனிடம் மக்கள் வேண்டுகோள்? கரூரில் இன்று 2வது நாளாக விசாரணை
சென்னை: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தன்னுடைய ஆய்வை நேற்று தொடங்கி உள்ளார். கரூர் வேலுசாமிபுரத்துக்கு வந்த அவர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இன்று 2வது நாளாக ஆணையம் தன்னுடைய விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது,.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

இதில் 9 குழந்தைகள், 18 பெண்கள், 14 ஆண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அசம்பாவித சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...
ஆணையம் விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.. இதையடுத்து ஆணையம் கரூரில் நேற்று தன்னுடைய விசாரணையை தொடங்கியது.
முதல்கட்டமாக 41 பேர் பலியான வேலுச்சாமிபுரத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த நீதிபதி அருணா ஜெகதீசன், அந்த பகுதி முழுவதையும் பார்வையிட்டார்.. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.
நிபந்தனைகள் - அருணா ஜெகதீசன்
அப்போது பிரச்சாரத்தின்போது அசம்பாவிதம் எப்படி நடந்தது? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் அவருக்கு விளக்கினார்கள்.. பிறகு, பிரச்சார கூட்டத்துக்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? எந்தெந்த நிபந்தனைகளை எல்லாம் மீறினார்கள்? என்ற அருணா ஜெகதீசன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர்..
அதேபோல சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடமும் நீதிபதி அருணா ஜெகதீசன் சில கேள்விகளை முன்வைத்தார்.. குறிப்பாக, கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? போலீஸ் பாதுகாப்பு எப்படி இருந்தது? எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்? அடிப்படை வசதிகள் எப்படி இருந்தன? என்றெல்லாம் கேட்டு அறிந்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்தெல்லாம் பொதுமக்கள் அவரிடம் விளக்கமாக எடுத்து சொல்லியிருக்கிறார்கள்..
போலீஸ் கட்டுப்பாடு
சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும், அலங்கோலமாய் காணப்படுகிறது.. செருப்புகளும், கட்சிக் கொடிகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.. இவைகளை எல்லாம் அருணா ஜெகதீசன் பார்வையிட்டிருக்கிறார்.
மேலும், சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளதாக தெரிகிறது.. இன்று கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் இந்த விசாரணையை நீதிபதி மேற்கொண்டு வருகிறார்..
கரண்ட் கட், ஸ்பீக்கர் வேலை செய்யல
நேற்றைய தினம் விசாரணையின்போது பொதுமக்களில் சிலர், ''ஒருசிலரிடம் மட்டும் விசாரணை மேற்கொள்ளாமல், எல்லா தரப்பினரிடமும் விசாரிக்க வேண்டும். முக்கியமாக, விஜய் பேச வந்தபோது திடீரென கரண்ட் கட்டாகிவிட்டது.. ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை.. இது குறித்தெல்லாம்கூட முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.
எனவே இன்றைய தினம் இதுதொடர்பாகவும் நீதிபதி விசாரணை மேற்கொள்வார் என கருதப்படுகிறது.. இந்த விசாரணைக்கு பிறகு விரைவில் விரிவான அறிக்கையை அவர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications