ஜஸ்ட் மிஸ்.. வருத்தப்பட்ட விஜய்? என்ன நடந்தது? : ‘அமரன்’ ராஜ்குமார் ஓபன் டாக்
சென்னை: 'அமரன்’ படத்தின் இயக்குநரை அழைத்து நடிகர் விஜய் பாராட்டி இருந்த நிலையில், இந்தச் சந்திப்பின்போது இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி .
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்’ படம் பற்றி கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தேசிய அரசியலை முன்னிறுத்தும் சிலர் அந்தப் படத்தை வைத்து ஒரு அரசியலை முன்னெடுக்க முயற்சி செய்தனர். அதேபோல் அந்தக் கருத்து எதிரானவர்கள் படத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்தப் படம் காமெடி நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு வேறு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். அதற்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி’ படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தார்.

இவர் இயக்கிய முதல் படம் 'ரங்கூன்’. அந்தப் படம் பற்றிப் பேசிய இவர், “நான் 'ரங்கூன்’ கதையை 153 பேரிடம் சொல்லி இருக்கிறேன். பல காரணங்களுக்காகத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்தனை முறை சொல்லும் போதும் ஒருமுறைகூட சோம்பேறித்தனம் கொண்டதே இல்லை. அதே உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறேன். படம் முடிந்து அது திரையிட அனுப்பிய பிறகு, என்னால் அந்தக் கதையை வரிசை மாறாமல் சொல்ல முடியாமல் மறந்து போனது. எப்போதும் ஒரு வேலையை முடிக்கும் வரை அதுவே என் மனதில் எப்போதும் இருக்கும்.
அப்படித்தான் அமரன் படமும். அக்டோபர் 28 அன்றுதான் முழு காப்பி ரெடியானது. 31 ஆம் தேதிதான் ரிலீஸ். அதன்பிறகு சீன் பை சீன் என்ன என்பது மறந்து போனது. ஒரு கல்லூரியில் படம் போட்டபோது நானும் பார்த்தேன். எனக்கே முழுப் படமும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அந்தளவுக்கு அந்த வேலையிலிருந்து வெளியேறிவிட்டேன். என் இயல்பு அப்படித்தான். முடியும் வரை மட்டும்தான் அதே நினைவில் இருப்பேன்” என்கிறார்
தொடர்ந்து விஜய் சந்திப்பு பற்றிப் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “கல்லூரி முடித்த பிறகு விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேலை பார்த்த ஒரு சேனலில் ஒரு ஷோவை இயக்கும் வேலை கொடுக்கப்பட்டதால், அவரிடம் சேர முடியவில்லை. அதன்பின் 2011 முருகதாஸ் 'துப்பாக்கி’ வாய்ப்பு கிடைத்தது. அதில் வேலை செய்யும் போதுதான் விஜய் அறிமுகம். அவர் 'அமரன்’ பார்த்த பிறகு என்னைச் சந்திக்க அழைத்திருந்தார்.
உடனே எனக்கு 'துப்பாக்கி’யில் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட நினைவு வந்தது. அவரைப் பார்க்கப் போகும்போது பழைய நினைவுகளில் மூழ்கியபடி அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே போனேன். அவரை சந்தித்தேன். 25 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார். நான் உள்ளே போனதும் 'அமரன்’ கொஞ்சம் முன்பே வந்திருந்தால், நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்கலாம். இப்போது அது முடியாமல் போய்விட்டது. இந்தக் கதையை எடுத்ததற்காக என்னை பாராட்டினார். உண்மையாகவே அவருக்குப் படம் பிடித்திருந்தது.
விஜய் படத்திலிருந்துதான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆகவே, என்னை அழைத்துப் பாராட்டினார். வெளியே வரும்போது நானே 'ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?’ எனக் கேட்டேன். அவரும் உடனே கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். உடனே அவரிடம் பழைய படத்தைக் காட்டினேன். முருகதாஸ் பிறந்தநாளையொட்டி ஒரு பார்ட்டி நடந்தது. செப்டம்பர் 25 ஆம் தேதி இரவு 12 மணிக்கு எடுத்த புகைப்படம் அது. அதன்பின்னர் இப்போதுதான் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து படம் எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications