நீட் முறைகேடுக்கு எதிராக குரல் கொடுத்த ஜோதிகா.. "தாய்மார்களாகிய நாங்கள்.." சோனமிற்கு புகழாரம்
சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் நடிகை ஜோதிகா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஜோதிகா தெரிவித்திருப்பதாவது, "தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்கள், ராஜினாமா செய்யுங்கள். நான் மாணவர்களுடனும், நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்கிறேன். நான் பொறுப்புணர்வு பக்கம், ஜனநாயக இந்தியாவுக்காக, சீர்திருத்த கல்விக்காக நிற்கிறேன்.

தாய்மார்களாகிய நாங்கள், சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை போல எங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறோம். வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே.. உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சிஜேபி (கரப்பான் ஜனதா கட்சி)" என பதிவிட்டிருக்கிறார்.
மாணவர்களின் போராட்டம்
நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் டெல்லியில் மாணவர்கள் இதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு திரை துறையினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஜோதிகாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். முன்னதாக மாணவர் போராட்டம் காரணமாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டிருந்தார்.
அதேபோல, மத்திய அரசு இந்த போராட்டத்தை தீவிரமாக கருத்தில் கொண்டிருக்கிறது. என்டிஏ அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்ய தொடங்கியிருக்கிறது. இதுவரை 47 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அதே நேரம், நீட் விவகாரம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க.. தேவையான தகவல்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
ஆனால், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு மட்டும் ஓகே சொல்லவில்லை. இந்த கோரிக்கையை தவிர்த்து மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
