இரட்டை இலையை முடக்கி.. ரஜினியை முன்னிறுத்தி எம்பி தேர்தலை சந்திக்க பாஜக திட்டம்? மாஜி எம்பி பரபரப்பு
சென்னை: அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க? என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவில் நல்லதொரு மாற்றம் தென்பட வேண்டும். அப்போதுதான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைத்து தேர்தலில் அந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியை எதிர்நோக்க முடியும்.
நிர்வாகிகள் பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் ஒருங்கிணைந்த அதிமுகவையே தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் காலத்து நிர்வாகிகளின் கருத்து என்னவெனில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் இப்படி சண்டையிட்டுக் கொண்டு அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடுவதன் பின்புலத்தில் பாஜக இருக்கிறது என்கிறார்கள்.

இரட்டை இலை
மேலும் இரட்டை இலையை முடக்கவே பாஜக இவர்கள் இருவரையும் ஆட்டுவிப்பதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதே கேள்வியைத்தான் அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிசாமியும் முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சுயநலத்தால் பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுகவை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பலி கொடுத்துவிட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை உடைத்து சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்து அதில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த் டெல்லி பயணம்
எதை வைத்து இப்படி கூறியுள்ளீர்கள் என ஒன் இந்தியா சார்பில் கே சி பழனிசாமியிடம் கேட்ட போது, ரஜினிகாந்த் டெல்லிக்கு திடீரென சென்றுள்ளார். மேலும் அவர் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன.

ரஜினி வருவாரா?
அரசியல் வர மாட்டேன் என ரஜினி கூறியிருந்தாலும் அவரை பாஜக எப்படியும் அரசியலுக்கு அழைத்து வந்துவிடும் என கே சி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அதிமுகவுக்கு ரஜினி தலைவராகிறார் என ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் அது பின்னர் அப்படியே காற்றோடு காற்றாக ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

ஒற்றைத் தலைமை
மேலும் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்ற நிலையை பாஜக விரும்பவில்லை என்றும் இரட்டை தலைமை இருந்தால்தான் தங்கள் இஷ்டத்திற்கு அதிமுகவை பின்னோக்கி தள்ளிவிட்டு பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக தமிழகத்தில் வளர முடியும். இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக முயற்சிகளை செய்து வருகிறது என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications