தூய்மைப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்களா?.. கே.என்.நேரு அளித்த விளக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 12வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தூய்மைப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கேன்.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணி தனியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மாநகராட்சி பிரதான அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் இன்றுடன் 12வது நாள் எட்டியுள்ளது.

துப்புரவு பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், இயக்கங்களே நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக சேகர் பாபு போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியும் பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு வலியுறுத்தி உள்ளது. ஆனால், போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், எங்களது துறையின் அமைச்சர் எங்கே என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களிடம் இதுவரை 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 300 பேர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வழக்கை முடித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று கூட அவர்களிடம் பேசியுள்ளேன்.
இந்தப் பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்க்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். வடமாநிலத் தொழிலாளர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி. பணியாளர்களை வேலையை விட்டு நீக்கவில்லை. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். கோரிக்கைகளை ஒரே நாளில் நிறுத்த இயலாது கால அவகாசம் வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications