ராஜ்யசபா எம்பியாக மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து தேர்வா.. டபுள் ஓகே சொல்லும் கே எஸ் அழகிரி
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் கட்சியும் திமுகவும் வரவேற்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திமுக மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறனும் வடசென்னை எம்பி கலாநிதி வீராச்சாமியும் கே எஸ் அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது செய்தியாளர்களை கே எஸ் அழகிரி சந்தித்தார். அவர் கூறுகையில் திமுக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு கொள்கை ரீதியாக இருந்ததே காரணம். மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் பேசியதால் எங்கள் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து திமுகவுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம். சட்டசபை உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ததால் காங்கிரஸுக்கு இழப்பு ஏதும் இல்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து மேலவைக்கு தேர்வு செய்யப்படுவதாக இருந்தால் அதை காங்கிரஸும் திமுகவும் வரவேற்கும். எனினும் இதுகுறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்வர். தயாநிதி மாறனும், கலாநிதி வீராச்சாமியும் காசு கொடுக்காமலேயே வெற்றி பெற்றுள்ளனர் என்றார் கேஎஸ் அழகிரி.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் 37 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications