என் வழி தனிவழி-அடுத்தடுத்து எடப்பாடியை உதறிய செங்கோட்டையன்- அதிமுகவுக்கு முழுக்கு? பாஜகவில் சங்கமம்?
சென்னை: அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி மற்றும் கலகக் குரல்களை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் விரைவில் தாம் பாஜகவில் இணைவதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுகவை ஒருங்கிணைக்கும் கலகக் குரலாக வெளிப்பட்ட செங்கோட்டையன் தற்போது பாஜக முகாம் நோக்கி பயணிக்கிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
அதிமுகவில் கடந்த பல மாதங்களாக அதிருப்தி குரல்கள் எழாமல் அமைதியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி இயங்கி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி, கோவை அன்னூரில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாயிகள் சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி புறக்கணிப்பு
கோவை மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த செங்கோட்டையன், அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை; அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தார்.
சீனியர் என பெருமிதம் பேசிய செங்க்ஸ்
இதனைத் தொடர்ந்து அதிமுக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை உச்சரிப்பதையே தவிர்த்தார்; எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசினார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியை விட தாம் அதிமுகவில் சீனியர் என்பதையும் பட்டியல் போட்டுப் பேசினார்; தம்மை ஜெயலலிதா பாராட்டிப் பேசிய ஆடியோவை பொதுக் கூட்ட மேடையிலேயே ஒலிபரப்பினார்.
அதிமுகவில் பட்டும் படாமலும்
இதன்பின்னரும் அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்தார் செங்கோட்டையன். அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜூன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய போது அங்கு சென்ற செங்கோட்டையன் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அண்ணாமலைக்கு அதீத மரியாதை
இதனைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி இல்லத் திருமண விழாவில் அதிமுகவினரோடு அதிமுகவினராக கலந்து கொண்டாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எழுந்து நின்று பவ்யமாக செங்கோட்டையன் வணக்கம் வைத்து முகமலர்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
செங்கோட்டையன் மீண்டும் புறக்கணிப்பு
பின்னர் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் செங்கோட்டையன் பங்கேற்றாலும் எடப்பாடி பழனிசாமியும் செங்கோட்டையனும் எதுவும் பேசவில்லை; இந்தக் கூட்டத்தில் இருந்து செங்கோட்டையன் பாதியிலேயே வெளியேறினார்.
சட்டசபையில் தனி ஆவர்த்தனம்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏக்களுடன் செல்லாமல் தனியாகவே சென்றார் செங்கோட்டையன். தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்; ஆனால் செங்கோட்டையன் மட்டும் தனியே வெளியேறினார்.
சபாநாயகருடன் தனியே சந்திப்பு
மேலும் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியே சந்தித்தும் பேசினார். சபாநாயகர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது திங்கள்கிழமையன்று விவாதம் நடைபெற உள்ளது; அதிமுக எந்த சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதோ அதே சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து செங்கோட்டையன் பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கடுப்பான எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன் தனியே வெளிநடப்பு செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கடுப்பாகிப் போன எடப்பாடி பழனிசாமி, அதை அவரிடமே போய் கேளுங்க என்றார்.
மோடிக்கு அதி உச்ச பாராட்டு
இதன் உச்சமாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பாராட்டித் தள்ளிவிட்டார். அப்பட்டமாக ஒரு பாஜக நிர்வாகியைப் போலவே செங்கோட்டையன் பேசினார். இத்தனைக்கும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளும் அல்ல; பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்பதும் உறுதியாகவில்லை. ஆனாலும் அதிமுகவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக என் பாதை தெளிவானது; சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்துவிடமாட்டேன் என பிரகடனும் செய்தார் செங்கோட்டையன். அவரது இந்தப் பேச்சு ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
பாஜகவுக்கு தாவும் செங்கோட்டையன்?
அண்ணா திமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து வலிமையாக ஒரு கட்சியாக, பாஜகவுடன் இணைந்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற கலகக் குரலாக செங்கோட்டையன் உருவானார்; ஆனால் தற்போது பாஜகவிலேயே ஐக்கியமாகும் முடிவில் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் உதறி தள்ளிவிட்டு பயணத்தைத் தொடங்கிவிட்டார் கே.ஏ.செங்கோட்டையன் என்பதையே நேற்றைய பேச்சுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
செங்கோட்டையனின் அரசியல் பயணம்
கோபிச்செட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன். 1977(சத்தியமங்கலம்), 1980 (கோபிச்செட்டிப்பாளையம்) , 1984(கோபிச்செட்டிப்பாளையம்) , 1989(கோபிச்செட்டிப்பாளையம்) , 1991(கோபிச்செட்டிப்பாளையம்) , 2006(கோபிச்செட்டிப்பாளையம்) , 2011(கோபிச்செட்டிப்பாளையம்), 2016(கோபிச்செட்டிப்பாளையம்) , 2021(கோபிச்செட்டிப்பாளையம்) தொகுதிகளில் வென்று எம்.எல்.ஏ.வானவர். எம்ஜிஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுகவின் வரலாற்றில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவர் கே.ஏ.செங்கோட்டையன். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சொத்துக் குவிப்பு வழக்கு செங்கோட்டையன் மீது இருந்ததால், தேர்தலில் போட்டியிடவில்லை. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்தார்; ஜெயலலிதாவின் ஆகப் பெரும் நம்பிக்கை பெற்ற தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன். இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குரு என்றும் அழைக்கப்படுகிறவர்தான் கே.ஏ.செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications