இன்னும் ஒரு வாரத்தில் ‘பெரும் கனவு’.. இப்படி பண்ணிட்டியேம்மா.. தூரிகை தற்கொலையால் கலங்கிய நண்பர்கள்!
சென்னை : தற்கொலை செய்துகொண்ட தூரிகை (பாடலாசிரியர் கபிலனின் மகள்), வரும் செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஒரு பெரிய அவார்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அவார்டு ஷோவுக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தான் இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார் தூரிகை.
மிகவும் பொறுப்பானவராகவும், தைரியமான பெண்ணாகவும் வலம்வந்த தூரிகை, தற்கொலை முடிவை எடுத்ததை நம்பவே முடியவில்லை எனக் கலங்குகிறார்கள் அவரை நன்கு அறிந்த அவரது நண்பர்கள்.
'தற்கொலை எதற்கும் தீர்வல்ல' என 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் நம்பிக்கையாக பதிவிட்ட தூரிகை, அதே முடிவைத் தானும் தேடிக்கொண்டுள்ளது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தூரிகையின் இந்தக் கொடுமையான முடிவு, கபிலனுக்கு ஏற்படுத்தியிருக்கும் வலியைப் பகிர்ந்து கொள்வதாக, அவரது குடும்ப நண்பர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் கபிலன்
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 2001ல் விக்ரம் நடிப்பில் வெளியான, 'தில்' படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கபிலன். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். அவரது ஏராளமான பாடல்கள் சூப்பர்ஹிட்டாகி உள்ளன. கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்தும் இருக்கிறார் கபிலன்.

கபிலன் மகள்
கபிலனின் மகள் தூரிகை, எம்பிஏ படித்துள்ளார். எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பண்முகத் திறமை கொண்டவர். 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். ஆடை வடிவமைப்பாளராக பல படங்களுக்கும், பிரபலங்களுக்கும் பணியாற்றி வந்த இவர், பீயிங் வுமன் மேகசின் என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் தனது வீட்டில், தூரிகை (28) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடும் அதிர்ச்சி
அங்கு வந்த அவரது அம்மா அவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தூரிகை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே வியத்தகு சாதனைகளைச் செய்த தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கான இதழ்
தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்த தூரிகை, 'Being Women Magazine' எனும் இதழை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்.17 அன்று தொடங்கினார். இந்த இதழில், சாதிக்கத் துடிக்கும், மாற்றத்திற்கான பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வந்தார். கடைசியாக கடந்த 1ஆம் தேதி மெரினாவில் நடந்த பாலின சமத்துவம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு அதை தனது இதழில் வெளியிட்டுள்ளார்.

செப்.,16ல் அவார்டு ஷோ
வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, 'Being Women Magazine' இதழ் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் 'Friendship Icon Award' என்ற பெயரில் ஒரு அவார்டு ஷோவை நடத்த திட்டமிட்டு வந்துள்ளார் தூரிகை. கடந்த சில வாரங்களாக, அதற்கான வேலைகளில் தான் மும்முரமாக உற்சாகமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

நம்பவே முடியல
இந்நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது, அவரது நண்பர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கபிலனின் நண்பர்கள் பலரும் கூட, மிகவும் உற்சாகம் மிகுந்த தைரியமான பெண்ணான தூரிகை, சந்திக்கிற அனைவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கக்கூடிய தூரிகை தற்கொலை செய்துகொண்டதை ஏற்கவே முடியவில்லை எனக் கலங்கிப்போய் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி போட வச்சுட்டியே
"16ஆம் தேதி நீ நடத்தப் போற அவார்ட் ஷோவுக்கு ஏ.வி-க்கு ஸ்கிரிப்ட் எழுதச் சொன்ன.. நாளைக்கு உன்னோட உட்காந்து உனக்காக ஸ்கிரிப்ட் எழுதவேண்டிய என்னை இப்படி கண்ணீர் அஞ்சலி பதிவு எழுத வச்சுட்டியே." என தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இளையராஜா வேதனையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2 நாள் கூட ஆகல
காதல், பேராண்மை ஆகிய திரைப்படங்களில் நடித்த சரண்யா, "வீடியோ கால் பண்ணி பேசி 2 நாள் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி ஒரு தண்டனையா? ஏன் என்னஒ இப்படி கதற வச்சுட்ட.. ஏன் நைட்ல கால் பண்ணி டீ குடிக்கலாம்னு கூப்பிட்ட" என கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.

பேச அழைத்தார்.. கொடுந்துயர்
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தூரிகை கபிலன் செப்., 4ஆம் தேதி தான் எனக்கு அறிமுகம். ஐஐடியில் செப் 16ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் பேச உற்சாகமாக அழைத்தார். இப்போது தற்கொலை. கொடுந்துயர்." எனப் பதிவிட்டுள்ளார்.

‘தற்கொலை தீர்வல்ல’
தூரிகை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை எதற்கும் தீர்வல்ல என ஒரு பெரிய போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். அப்படி இருக்க தற்போது எப்படி இந்த முடிவை எடுத்தார், அந்தளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது என அவரது நண்பர்களும், அவரை நன்கு அறிந்தவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பழனி பாரதி இரங்கல்
"கபிலனின் அன்புமகள் தூரிகையின் தற்கொலை தேற்ற முடியாத பேரிழப்பு. "எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்று முகநூலில் பதிவிட்ட தூரிகை, இப்படி ஒரு முடிவெடுத்தது பெருந்துயரம். ஆழ்ந்த இரங்கல்." எனத் தெரிவித்துள்ளார் பாடலாசிரியரும் கவிஞருமான பழனி பாரதி.

சீமான் இரங்கல்
"புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்." என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications