"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?
சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் நினைவுகள் தமிழகம் முழுவதும் போற்றப்பட்டு வரும் வேளையில், அவர் மேடையில் தோன்றி தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சிப் பெருக்குடன் ஆற்றிய கடைசிப் பொதுக்கூட்ட உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
2016ஆம் ஆண்டு தனது 93-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கலைஞர் ஆற்றிய அந்த உரைதான், அவர் பொதுமேடையில் முழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கடைசிப் பெருமுழக்கமாகும். 2016 மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களிலேயே இந்த வரலாற்றுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் திமுக நூலிழையில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும், 89 எம்.எல்.ஏ-க்களுடன் பலமிக்க எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்தது. இதனால் சோர்வுற்றிருந்த தொண்டர்களுக்குத் தெம்பூட்டும் வகையில் கலைஞர் உரையாற்றினார்.
மேடைக்கு வந்த கலைஞர், தனக்கே உரிய காந்தக் குரலில், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..." என்று முழங்கியபோது மைதானமே தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. அதில், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.. நானும் நீங்களும் இங்கு கூடியிருக்கிறோம். தேர்தல் முடிந்துவிட்டதே, அதற்குப் பிறகும் இவ்வளவு பெரிய கூட்டமா என்று சிலர் வியப்படையலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளுக்காகக் கூடுகின்ற கூட்டம் அல்ல இது; கொள்கைகளுக்காகக் கூடுகின்ற உடன்பிறப்புகளின் பெருங்கடல்!
நடந்து முடிந்த தேர்தலில் நாம் கோட்டையைப் பிடிக்கவில்லை என்றாலும், கோட்டையே அதிரும் அளவிற்கு 89 சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் நமக்குத் தந்து, ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக நம்மை அமர வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றி சாதாரணமானது அல்ல. தோல்வி கண்டு நாம் சோர்வடையக் கூடாது. வெற்றியோ, தோல்வியோ நாம் எதற்கும் அஞ்சுபவர்கள் அல்ல என்பதை இந்த இயக்கம் பலமுறை நிரூபித்திருக்கிறது.
இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும், இந்தத் தேர்தலுக்காக இரவும் பகலும் அயராது உழைத்த என்னுடைய அன்பான தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பும், வியர்வையும்தான் இந்த இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள்.
Video: கலைஞரை ஏன் பிடிக்கும்? சென்னை மக்கள் பதில்
என்னுடைய 93-ஆவது பிறந்தநாளில் நீங்கள் எனக்குத் தரும் இந்த அன்பு, எனக்கு மேலும் பல ஆண்டுகாலம் வாழ வேண்டும், உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற தெம்பைத் தருகிறது. உங்களுடைய இந்த முகங்களைப் பார்க்கும்போது என் வயது எனக்குத் தெரிவதில்லை. மீண்டும் ஒரு இருபது வயது இளைஞனைப் போலத் துள்ளிக் குதிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது.
நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு இப்போது மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. மக்கள் நமக்குத் தந்திருக்கும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாம் மக்களுக்காகக் குரல் கொடுப்போம்.
இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை, என் நெஞ்சில் கடைசி சொட்டு ரத்தம் ஓடும் வரை, அது தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும், இந்த இயக்கத்திற்காகவும் மட்டுமே துடிக்கும். நான் என்றும் உங்கள் வீட்டுப் பிள்ளை. என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன், உழைப்பேன்! நன்றி, வணக்கம் என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications