மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு கிடைக்குமா? வெளியான தகவல்
சென்னை: கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த உள்ள நிலையில் புதிய குடும்ப அட்டை கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திட்டமாக இது பார்க்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில்ல், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான வரைமுறைகளும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களின் பெண்கள் இதற்கு தகுதியானவர்கள். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்.
திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள் / வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்" இந்த உரிமைத் தொகையை பெற முடியாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. இதனிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்த உள்ள நிலையில் ,கூட்டுக் குடும்பமாக ஒரே குடும்ப அட்டையின் கீழ் இருக்கும் பலர் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்து தனித்தனி குடும்ப அட்டைகளை பெற்று ரூ.1000 உதவித் தொகையை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
எனவே, இதனை தடுக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் பெறும் பணி முடியும் வரை குடும்ப அட்டை பெயர் நீக்க விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தராமல் உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இன்றி இதுவரையில் ரேஷன் கார்டு பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கிறார்கள்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் வழக்கமாக புதிய ரேஷன் கார்டு கேட்டு 500 விண்ணப்பங்கள் பதிவாகி வருகிறதாம். புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுகு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே கார்டு உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறதாம்.
இது தொடர்பாக உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்றாலும் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
புதிய ரேஷன் கார்டு கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் வருகிறது. அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. எனினும், கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது" என்றனர்.












Click it and Unblock the Notifications