பல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: தன் மீதான புகார்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகக் கடந்த 2018ஆம் சூரப்பா நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகள் இவர் பதவியில் இருக்கும்போதே தமிழக அரசுக்கும் இவருக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இவர் இருந்த போது சுமார் 250 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் சூரப்பா மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரியவந்தது. இதனால் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. இருப்பினும், விசாரணை முடியும் முன்னரே அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
தன்னை பதவி நீக்கம் செய்ய இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்று விட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இது குறித்துக் கடந்த மாதம் நீதிபதி கலையரசன், விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும் சூரப்பா ஓய்வு பெற்றாலும்கூட அவர் எங்குச் சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு கலையரசன் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தன் மீதான புகார்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications