கருப்பு சட்டை + அமளி.. கோபமான சபாநாயகர்.. சட்டசபையில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விவாதிக்க கோரி தமிழக சட்டசபையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவை காவலர்களால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதோடு இன்று ஒருநாள் சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன்பிறகு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.

இந்நிலையில் தான் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக அமளியில் ஈடுபட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு சென்றனர். சட்டசபை தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் நடந்தது. இந்த சமயத்தில் அதிமுகவினர் கடும் அமளி செய்தனர். கள்ளக்குறிச்சி பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறிய நிலையில் 21ம் தேதி சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு 22ம் தேதி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
நேற்றைய தினம் அதிமுகவினர் சட்டசபைக்கு வரவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தான் இன்று காலை 9.30 மணிக்கு 5வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்க இருந்தது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அதனை கடுமையாக கண்டித்தார் சபாநாயகர் அப்பாவு.
கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு விவாதிக்க அனுமதி தருவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனால் அதிமுகவினர் கேட்கவில்லை. கேள்வி நேரத்திலேயே கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளி செய்தனர். இதனால் சபை நடவடிக்கை தொடங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு இன்று ஒருநாள் அதிமுகவினர் சட்டசபை நிகழ்வில் பங்கேற்க தடை விதிப்பதாக கூறி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications