திமுகவுக்கு அடுத்த சிக்கல்.. கள்ளச்சாராய விவகாரத்தில் விசிக ஆர்ப்பாட்டம்! 2 மேஜர் டிமாண்ட்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து திமுகவின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஜுன் 24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் விசிகவின் செயலால் ஆளும் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிருக்கு போராடி வருபவர்களை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் உடனடியாக கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இருப்பினும் பல்வேறு தரப்பினர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் போலீசாரின் அலட்சியம் தான் கள்ளச்சாராய பலிக்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல் பூரண மதுவிலக்கு கோரிக்கைகளும் மீண்டும் எழ தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தொடர்ந்து 2 மேஜர் டிமாண்டுகளை நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவவன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛தொடரும் நச்சு சாராய சாவுகள்: கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலி! தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் 24.06.2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு ஆளும் திமுகவுக்கு பிரஷரை ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளது.












Click it and Unblock the Notifications