5 தொகுதிகள்.. டார்ச் லைட் வேண்டாம்.. உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்க.. கமல்ஹாசனை நெருக்கும் திமுக?
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. திமுக சார்பாக ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது.
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2.62 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. 180 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் 2வது இடமும், 25 தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதன்பின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகிய போது, திடீரென லோக் சபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்தது. அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி இணக்கமாக இருந்து வருகிறது.
கமல்ஹாசன் தயாரிக்கும் படங்களிலும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பங்களித்து வருகிறது. இந்த நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார். இதனை வெளிப்படையாக அறிவித்தும்விட்டார். கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று மநீம கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதேபோல் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது.
இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும். 2021 சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக டார்ச் லைட் சின்னத்தை கைப்பற்றியது.
இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக தலைமை பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக, விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இதனால் கமல்ஹாசனையும் அதே பாணியில் செயல்பட வைக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications