இளைஞர்கள் இப்படி பலியாகிறார்களே... கமல் கவலை...முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் அண்மை காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உயர்மதிப்பு மிக்க உயிர்கள் அநியாயமாக பறிபோகின்றன. சமீபத்தில் பெங்களூருவில் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதிய கோர விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் என்பவரது மகன் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்திற்கு உள்ளான சொகுசு காரை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டியதாகவும், அவரது அலட்சியம், கவனக்குறைவு காரணமாக தான் விபத்து நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோல் காரை ஓட்டியவர் மதுஅருந்தி இருந்ததாகவும், அதுவும் விபத்துக்கு காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதிகரிக்கும் விபத்துக்கள்
இதேபோல் பெருங்களத்தூரில் முன்னால் இரும்பு கம்பியுடன் சென்ற லாரியுடன் கார் மோதியதில் 5 மென் பொறியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி பலியானார். நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இவையெல்லாம் சமீபத்தில் நடந்த விபத்துக்கள். சாலையில் அதிவேகமாக செல்லுதல், நள்ளிரவில் போதிய அனுபவம் இல்லாமல் சாலைகளில் பயணிப்பது போன்றவை இத்தகைய விபத்துக்களுக்கு பிரதானமாக உள்ளது.

கமல் கோரிக்கை
மேலும், தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து வருவதால் அதன்மூலமாக பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. வாகனம் ஓட்டும்போது விதிகளை மீறி போதையில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோக காரணமாகின்றன. நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனும் இதையே தற்போது வலியுறுத்தி உள்ளார். ''சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்'' என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுளளார்.

போதை கலாசாரம்
இரு வாகனங்கள் மோதி கொள்வதை விட தற்போது தனி வாகனமாக வேகமாக சென்று வேறு வாகனத்தில்மோதிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மது தவிர இதர போதை பொருட்களும் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. வாகனம் ஓட்டும் போது சோதனையில் ஈடுபடும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதபடியான போதைப் பொருட்கள் ஏராளமானவை இருப்பதால் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தப்பித்து விடுகின்றனர். இவர்கள் தன் குடும்பத்தை மட்டுமில்லாது மற்றவர்கள் குடும்பங்களையும் சேர்த்து அழித்து வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையம்
சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான சம்பவம் போதை தான் காரணம் என்றால் போதையை ஒழிக்க வேண்டும், போதை மறுவாழ்வு மையம் தமிழகம் முழுவதும் அமைக்க வேண்டும். இந்த மையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாலை பாதுகாப்பு, சாலையில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும்? என்பது தொடர்பாக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுகிறார்கள்.

கடும் நடவடிக்கை தேவை
விதிகளை மீறி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. மேலும், அவர்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தினை ரத்து செய்யும் அளவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.மேலை நாடுகளில் ஓட்டுனர் உரிமத்திற்கு புள்ளிகள் (Points)வழங்கப்பட்டு ஒவ்வொரு குற்றத்திற்கும் புள்ளிகள் குறைக்கப்படும்.அதே போல் தமிழகத்திலும் தண்டனை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications