’தனித்து போட்டியா?’ கமல் ‘மைண்ட் வாய்ஸ்’ சொன்ன உண்மைகள்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்குத் தயாராகி விட்டார் கமல். 'கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று மநீம செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளை போட்டிருக்கிறார்கள். தேர்தல் களத்திற்குக் கமல் தயாராகிவிட்டார். ஆனால், அவரது கட்சி தயாராகிவிட்டதா? என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
தனது சினிமா போட்டியாளரான ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றதும் உடனடியாக அரசியல் களத்திற்கு வந்தவர் கமல். எல்லாவற்றையும் சினிமாவில் தான் தான் முதலில் செய்தேன் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்த யுக்தியாகவே அவரது கட்சியும் தொடங்கப்பட்டது.

ஆனால், அவருக்கு முன்பாகவே அரசியல் களத்தில் இருபெரும் சக்திகளாக மு.கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் எதிர்த்து கட்சியை ஆரம்பித்தவர் விஜயகாந்த். ஆரம்பித்தது மட்டும் அல்ல, 11% வாக்குகளைப் பெறும் அளவுக்கு அக்கட்சியை அவர் குறுகிய காலத்திலேயே வளர்த்தும் எடுத்தார்.
கமல்ஹாசன் நிலைமை அப்படி இல்லை. அவர் சினிமாவில் ஆடும்வரை ஆடிவிட்டு, கடைசியாக அரசியல் களத்தில் குதித்த அவர் ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சினையாக முன்வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை முதன்முதலாக 2018 வானில் பறக்கவிட்டார்.
அவர் அந்தக் கொடி மிகப் பெரிய உயரத்திற்குப் போய் பறக்கும் எனக் கனவு கண்டார். ஆனால், அது ஆழ்வார்பேட்டையைத் தாண்டி உயர முடியாமல் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அவர் கட்சி தொடங்கப் போகிறார் எனச் செய்திகள் பரவ ஆரம்பித்த போது கமல்ஹாசனைச் சந்தித்த ஊடகங்கள் 'நீங்கள் புதிய கட்சி தொடங்கப் போகிறீர்களா? எப்போது?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஊடக உந்துதலுக்காக உடனே கட்சி ஆரம்பிக்க முடியாது' என்றார்.
அந்தப் பேச்சின் ஈரம் காய்வதற்குக் கட்சியைத் தொடங்கினார் கமல். அதற்குக் காரணம், ஊடக அழுத்தம் இல்லை. அவருக்குள் இருந்த அழுத்தம்.
அவர், கட்சி தொடங்கி ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல் என இரு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான போர் எனக் குரலை எழுப்பியவர், டிவியை உடைத்தவர் அந்தத் தேர்தல் முடிந்த பிறகு ஒரு அரசியல் கட்சியாக எதற்காக எல்லாம் போராட்டம் நடத்தியிருக்கிறார்? எந்த எந்த மக்கள் பிரச்சினைகளுக்காக ஆளும் கட்சிகளைத் திணற வைத்திருக்கிறார்?
கட்சி தொடங்கி இந்த 5 ஆண்டுகளில் அது ஆழ்வார்பேட்டையை எட்டி ஒரு காரியத்தையும் செய்யவில்லை என்பதுதான் கள நிலவரமாக உள்ளது என்கிறார்கள் அவரை நம்பி மநீமவுக்கு சென்று மனக்கசப்போடு வெளியேறியவர்கள்.
இந்த 5 ஆண்டுகளில் மநீம தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எந்த எந்த விசயங்களில் எல்லாம் முன் நின்று உள்ளது என ஒரு பட்டியல் போட்டால் மார்க் என்னவோ பூஜ்ஜியம்தான் கிடைக்கிறது.

அவரது கட்சியில் இன்றைக்குச் செல்வாக்கு உள்ள நபர்கள் யாருமே இல்லை. பலர் வந்த வேகத்திலேயே அக்கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இன்றைக்குச் செயற்குழு என்பது ஒரு 'டம்மி' பாடி என்கிறார் அவரது சினிமா உலக நம்பரும் அரசியல் உலக நண்பருமான ஒருவர்.
கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருந்த டாக்டர் மகேந்திரன் இன்று அவர் கட்சியில் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி கமல்ஹாசனை நம்பி சென்ற பாரதி கிருஷ்ணகுமார் இன்று திமுகவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். டாக்டர் மகேந்திரனோ நேரடியாக திமுகவிலேயே இணைந்தேவிட்டார்.

ஒரு வீடியோவில் உலகத்திற்குப் பாடம் புகட்டிய பத்மப்ரியாவை அழைத்து தனது வேட்பாளராக அறிவித்தார் கமல். அப்போது அவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்தை முன்வைத்து சர்ச்சையில் சிக்கினார். இன்று இடஒதுக்கீட்டின் ஊற்றுக்கண்ணாக உள்ள திமுகவில் இருக்கிறார் அவர்.
கடந்த ஆண்டு கூட மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்பெஷல் ஃபோர்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா உலகம் தன்னைக் காப்பாற்றாது என நம்பிய கமல்ஹாசன், அரசியல் பக்கம் தலைவைத்தார். ஆனால் விதி தலைகீழாக மாறியது. அவரது 'விக்ரம்' படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது. அவரது சினிமா வரலாற்றில் தொட முடியாத வசூல் சாதனையை அது ஏற்படுத்தித் தந்தது.

அந்த நேரத்தில் அவருக்கு மீண்டும் சினிமா மீது ஆசை திரும்பி விட்டது. கட்சி தொடங்கிய வேகத்தில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் எனக் கனவிலிருந்த அவருக்குக் கடைசி இடம் கூட அரசியலில் கிடைக்கவில்லை. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சி தோல்வியைத் தழுவியது. இறுதியாக வானதி சீனிவாசனிடம் அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசனே தோல்வியைத் தழுவினார்.
அரசியலில் வெற்றித் தோல்வி சகஜம்தான். அண்ணாதுரை தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார். ஜெயலலிதாவே கூட தோல்வியைத் தழுவி இருக்கிறார். கிங் மேக்கர் என சொல்லப்பட்ட காமராஜர் கூட தேர்தலில் தோல்வியை அடைந்திருக்கிறார். இதை வைத்து அரசியல் கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது.
ஒரு கட்சி தனது தோல்விக்குப் பிறகு எந்த அளவுக்கு வேகம் எடுத்திருக்கிறது? எப்படி மீண்டு எழுந்து வந்துள்ளது என்பது முக்கியம். அப்படிப் பார்த்தால் கமல், தேர்தல் காலங்களில் மட்டுமே கடையைத் திறக்கிறார். வியாபாரம் செய்கிறார்.

விற்பனை இல்லை என்றால், அடுத்து சினிமாவுக்குப் போய்விடுகிறார். இதுவா ஒரு அரசியல் கட்சியின் அணுகுமுறை என்கிறார் கமல்ஹாசனின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வரும் பழைய பத்திரிகையாளர் ஒருவர்.
2019 மக்களவை தேர்தலில் 2.6% வாக்குகளை மநீம பெற்றது. கட்சி போட்டியிட்ட
முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் 8% வாக்குகளைப் பெற்றது. கோவையில் 10% பெற்றது. சென்னையில் 10% வாங்கியது.
ஆனால், சட்டசபைத் தேர்தலில் மநீமவின் நிலைமை இன்னும் மோசமானது. இப்போதைக்கு மநீமவுக்கு தமிழ்நாட்டில் பல ஊர்களில் நிர்வாகிகளே இல்லை. களப்பணி என்பது மாபெரும் வேலை. அதுவும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை எதிர்த்து வேலை செய்ய 100 குதிரை பலம் தேவை. அதற்கு மநீம தயாராக உள்ளதா என்பதற்குப் பதில், இல்லை என்பதுதான்.
ஆகவேதான் கமல்ஹாசன் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இரண்டு கொள்கைகளுக்கு யார் ஒற்று வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்கிறார்.
அப்படிச் சொல்லப்படும் இரண்டு கொள்கைகள் எதுவும் வலுவானதாக இல்லை. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியுடன் கமல் நெருக்கம் காட்டி வருகிறார்.
ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்த போது, பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். ஆக, அவர் முன்னால் இருப்பது ஒரே ஒரு வாய்ப்புதான். அது திமுக- காங்கிரஸ் அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணி. அதைவிட்டால் வேறு வழியே இல்லை. தனித்து நிற்பது தற்கொலைக்குச் சமமானது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டி என்பது கமல்ஹாசனே விரும்பாத விசயம் என்கிறார் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து வெளியேறிய இயக்குநர் ஒருவர்.












Click it and Unblock the Notifications