கமல்ஹாசனின் மநீம கட்சியில் விருப்ப மனு விநியோகம்.. கட்டணமாக ரூ.50 ஆயிரம் நிர்ணயம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கான கட்டணமாக ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருந்து வருகிறது. லோக்சபா தேர்தலின் போது ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு மக்கள் நீதி மய்யம் ஒப்புக் கொண்டது. அதற்கேற்ப மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் எம்பியாக பதவியேற்றார். இதையடுத்து சட்டசபைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வருகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக 180 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மட்டுமே 2வது இடத்தை பிடித்து சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 25 தொகுதிகளில் 3வது இடமும் பிடித்தது. மொத்தமாக 2.62 சதவிகித வாக்குகளை பெற்றது.
ஒருவர் கூட மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெல்லாததால், அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்தனர். இதையடுத்து கமல்ஹாசன் மீண்டும் நடிக்கவும் தொடங்கினார். இருந்தாலும் லோக்சபா தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி அமைத்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தமாக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கான கட்டணம் ரூ.50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிற கட்சிகள் விருப்ப மனுவுக்கான கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே நிர்ணயித்துள்ளனர். ஆனால் மநீம கட்சியின் தரப்பில் ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 15 தொகுதிகள் வரை கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications