6 தொகுதிகள் போதும்.. திமுகவிடம் பேச தயாராகும் கமல்ஹாசன்.. மீண்டும் கோவை தெற்கில் களமிறங்கும் மநீம?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 6 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிடும் முடிவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியை வளர்க்க சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற அத்தனை கட்சிகளும் இணக்கமாக இருந்து வருகின்றன. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பின் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி
காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு தொடர்பாக பேசி வரும் சூழலில், தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதேபோல் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி விலகினால், அவர்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
மநீம பொதுக்குழு
இதனிடையே லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்ய சபா சீட் மட்டும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றனர். அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
புலம்பிய கமல்ஹாசன்
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லையே.. நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி என்று சோகம் அடைந்திருக்கிறார். இதனால் மநீம கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது நிர்வாகிகள் தரப்பில் எங்களை திட்டினால் மட்டும் போதாது.. கட்சி சார்பாக போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
6 தொகுதிகள்
அதேபோல் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர். இதனை கமல்ஹாசனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளை கேட்க கமல்ஹாசன் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications