கமலின் "ராஜபார்வை".. உதயசூரியன் வெளிச்சத்தில் "டார்ச்".. கருகுதா தாமரை? உதிருதா இலை? ஒன்னுமே புரியலயே
சென்னை: கமல்ஹாசனின் மநீம கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொங்குவில் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, பாஜகவும் அடுத்தக்கட்ட அதிரடியில் களமிறங்கி உள்ளது.
எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.. இதற்கு காங்கிரசும் பெருத்த துணையாக இருக்கும் என்று கணக்கு போடப்பட்டு வருகிறது.

ஆனால், பெங்களூருவில் அன்று எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திற்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை என்றதுமே கமல் அப்செட் ஆகிவிட்டதாக சொன்னாராம். அதுமட்டுமல்ல, கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய 3 லோக்சபா தொகுதிகளை, எந்த கூட்டணி தருகிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு கமல் வந்துள்ளதாக, அன்றே செய்திகள் பரபரத்தன.
3 தொகுதிகள்: அதேசமயம், தென் சென்னை, கோவை ஆகிய 3 தொகுதிகளையும் மநீம குறிவைத்துள்ள நிலையில், இந்த இடங்களை எந்த கூட்டணி தரப்போகிறதோ, அங்கே கூட்டணி என்ற முடிவிலும் மநீம உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று நடந்து முடிந்துள்ளது.. கமல் இந்த கூட்டத்துக்கு வரப்போகிறார் என்றதுமே, கோவையே பரபரத்துவிட்டது. எங்கு பார்த்தாலும், போஸ்டர்கள் ஆச்சரியத்தை கிளப்பின.. காரணம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சீண்டி அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கருதப்பட்டது.
மலை - அண்ணாமலை: அதில், "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமயமலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்று மய்யத்தினர் போஸ்டர்களை ஒட்டியதுமே, பாஜகவுக்கு கடுப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டது.. அதற்கேற்றவாறு, செயற்குழு கூட்டத்தில் கமல் பேசிய பேச்சானது, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் திமுகவுடனான கூட்டணியையும் கமல் பேச்சு உறுதிப்படுத்தியது போல இருக்கிறது.
"சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதுக்காக, ஒரு சின்ன பிள்ளையை பாடாய்படுத்துகிறார்கள்... அந்த குழந்தையின் தாத்தாவுக்கு தாத்தா சொன்ன விஷயம்தான் அது.. எங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்ததே பெரியார் சொல்லிதான். 40 வருடத்துக்கு முன்பு திமுக. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அப்படி செய்தது தப்பு. இனிமேல் அதை செய்ய நான் தயாராக இல்லை. இவ்வளவு காலம் கடந்து அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கோவை தொகுதி: மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் போட்டியிடுங்கள் என்று கட்சியில் அழைக்கிறார்கள். ஏற்கனவே தோல்வியடைந்து மூக்கை உடைத்து விட்டேன். அதற்கு மருந்து போட்டுவிட்டு நான் மறுபடியும் கோவையில் போட்டியிடுவேன். திமுக நிர்வாகிகளே, என்னிடம் நீங்கள் தோற்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
மத்திய அரசின் அசவுகரியத்தால் நாம் பலியாகிவிடக்கூடாது. ஒருவர் தான் மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயகம் அல்ல. அதை எதிர்த்துதான் இன்று 'இந்தியா' வெகுண்டு பேசிக்கொண்டு இருக்கிறது என்பது உட்பட பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார் கமல்ஹாசன்.
கோவை தொகுதி: ஆக, திமுகவுடன் கூட்டணி என்பதுடன், கோவையில் கமல் மறுபடியும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. கடந்த சில மாதங்களாகவே, கோவை தொகுதியை குறி வைத்தே, களப்பணிகள் துரிதமாகியிருந்தன.. பஸ்டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் வாங்கி தந்ததற்குகூட, இந்த காரணம்தான் முணுமுணுக்கப்பட்டது.
கடந்த முறை, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்தால், கமல் கடும் விரக்திக்கு போனதாகவும், அதனால்தான், இந்த முறை, விட்டத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன், கூட்டணி என்ற விஷயத்திலும் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை கோவையில் கமல் போட்டியிடுவது உறுதியானால், பாஜக சார்பில் யார் களமிறங்க போகிறார்கள்? என்ற ஆர்வமும் பெருகி வருகிறது.
காரணம், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்குவில், பாஜகவின் பலம் கூடிவருகிறது. மற்றொருபக்கம், திமுகவின் கொங்கு புள்ளிகள், தொடர்ந்து டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடுவில், அண்ணாமலையின் எழுச்சி பயணமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
பார்முலா: அதுமட்டுமல்லாமல், எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுகவின் முக்கியத்துவத்தை குறைக்கவும், கூட்டணி பார்முலாவை நொறுக்கவும், பாஜக தீவிரம் காட்டி வரும்நிலையில், கொங்குவில் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. கொங்குவை தன்வசமாக்க கடந்த 3 வருடங்களாகவே, திமுக மேலிடம் முயன்று வரும்நிலையில், தற்போது அதற்கான நெருக்கடிகளையும் பாஜக ஏற்படுத்தி உள்ளதையும் மறுக்க முடியாது..
எனவே, கூட்டணி கட்சிக்கு திமுக கோவையை ஒதுக்குமா? அல்லது நேரடியாகவே களமிறங்கி பாஜக அதிமுக கூட்டணிக்கு பதிலடி தரப்போகிறதா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..












Click it and Unblock the Notifications