"இந்தியை திணிக்கக் கூடாது.. ஆங்கில வழி கல்வி ஓகே.." கமல் ஹாசன் மிக தெளிவாக அடுத்து சொன்ன பாயிண்ட்!
சென்னை: தென்னிந்தியாவில் இந்தி மொழி திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தேவை என்றால் எந்தவொரு மொழியையும் கற்பார்கள் எனக் கூறிய கமல், இந்தியைத் திணித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்தி மொழியைத் திணிப்பதாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே மொழி கொள்கை விவகாரத்தில் இப்போது கமல்ஹாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியைத் திணிக்கக்கூடாது
இது தொடர்பாகக் கமல் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் 'ஏக் தூஜே கே லியே' (இந்தி படம்) திரைப்படத்தில் நடித்த நடிகர். எந்தவொரு திணிப்பும் இல்லை என்றாலும் தேவை என்றால் ஒரு மொழியை நாங்கள் கற்றுக்கொள்வோம். திணிக்க வேண்டாம் என்றே சொல்கிறோம்.. ஏனென்றால் இது கல்வி தொடர்புடையது. கல்வியை எளிதாக்கவே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.
சர்வதேச மொழிகள்
இந்தி மொழியைத் திணிப்பது கற்றல் செயல்முறையைத் தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மொழி திணிக்கப்படுவதாகவும் இது கற்றல் செயல்முறையைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச வாய்ப்புகளைப் பெற மாணவர்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ் அல்லது சீனம் போன்ற சர்வதேச மொழிகளைக் கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆங்கிலக் கல்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப்போது திடீரென ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழியைக் கொண்டு வந்தால் அது பலரையும் பாதிக்கும். மொழி உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
ஆங்கிலம் போதும்
என்னைப் பொறுத்தவரை ஆங்கிலம் போதுமானதாக தெரிகிறது. நீங்கள் தேவை என்றால் ஸ்பானிஷ் அல்லது சீன மொழியையும் படிக்கலாம். இந்தியாவில் கடந்த 350 ஆண்டுகளாக ஆங்கில வழிக் கல்வி மெதுவாக அதேநேரம் சீராக இருந்துள்ளது. இப்போது நீங்கள் அதை திடீரென மாற்றும்போது, எல்லாவற்றையும் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இதனால் பலரும் பாதிக்கப்படலாம்.
நீங்கள் திடீரென்று இந்தியைத் திணித்து, விந்திய மலைக்கு மேல் உங்களுக்கு வேலை கிடைக்காது என்று சொன்னால், உங்கள் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மக்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.. எனது மொழி 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று தானே.. எனக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என்ற கேள்விகள் எழத் தொடங்கும்" என்றார்.
தக் லைப் சர்ச்சை
சமீபத்தில் நடந்த தக் லைப் ஆடியோ வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்தே கன்னடம் வந்ததாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். கமலின் இந்த பேச்சை வைத்து கன்னட அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பின. கர்நாடக பிலிம் சாம்பரும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைப் படத்திற்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இதனால் கடந்த ஜூன் 5ம் தேதி உலகெங்கும் வெளியான தக் லைப் படம் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications