எல்லாமே ‘அமரன்’ எஃபெக்ட்.. தம்பி அண்ணாமலைக்கு நன்றி! என்ன கமல்ஹாசன் இப்படி இறங்கிட்டாரு! மாற்றமா?
சென்னை: காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சென்னை ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' திரைப்படமாக வெளி வந்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து பாராட்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'தம்பி' எனக் கூறி நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன்.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். சென்னையை சேர்ந்த முகம் வரதராஜன் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், மேஜராக உயர்ந்தார்.

தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்ட்ரிய ரைபிள் குழுவில் இணைந்தார். தொடர்ந்து பல சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களை நிகழ்த்தியிருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன்.
2013இல் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அல்தாப் பாபாவை சுட்டு வீழ்த்தும் குழுவில் முக்கிய பொறுப்பாற்றி இருந்தார். அதற்கு முன்னதாக லெபனான் சென்ற ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையிலும் பணியாற்றியவர் தான் மேஜர் முகுந்த் வரதராஜன். ஏப்ரல் 2014 இல் காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார். தொடர்ந்து முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசின் மிக உயர்ந்த அமைதி கால வீர விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் அப்போதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருதை அவரது மனைவி இந்து ரபேக்கா வர்கீஸ் இடம் வழங்கினார். தற்போது இந்த சம்பவங்கள் தான் அமரன் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளி வந்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது இந்த நிலையில் இந்த படத்தை கமல்ஹாசனின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர். அதுமட்டுமல்லாமல் பலரும் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி கேரியரில் இது மிக முக்கிய படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் பாஜக தலைவரான அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'அமரன்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல முக்கிய அம்சங்களில் இது மிக முக்கியமான படம். படத்தில், எனது காக்கி சீருடையை அணிந்து கொண்டிருந்த அந்த நாட்களை நான் நினைவுகூரும் தருணத்தில், 2014-ஆம் ஆண்டு நாட்டின் பாதுகாப்புக்காக உள்நோக்கிய சுதந்திரம் கொண்டிருந்தபோது நாம் இழந்த உணர்வையும் உணர வைத்தார். அந்த உணர்வுகளை, அந்த பெருமையுடன் வலிமையுடன் தாங்கும் அவர்களின் குடும்பங்கள் எப்போதும் நம் மனங்களில் இருக்கும்.
ராஜ்குமார் பெரியசாமி அவர்களின் அருமையான இயக்கம், சிவகார்த்திகேயன் அவர்களின் அதிசயமான நடிப்பு, அவருடைய நடிப்பில் இது மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது, சாய்பல்லவி அவர்களின் வேடமும் மாறுபட்டது, மனதை உற்று கொள்ளும் இசையும், உணர்ச்சிமிகு காட்சியையும் தரும் ஒளிப்பதிவு. இந்த படத்தை உருவாக்கியதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு சிறப்பு நன்றி" என கூறியிருந்தார்.
அண்ணாமலையின் பாராட்டுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தை பார்த்து பாராட்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ’தம்பி’ எனக் கூறி நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில்,” தமிழக பாஜக தலைவர், தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.
சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் களம் இறங்கியிருக்கும் கமல்ஹாசன், தற்போது காங்கிரஸ் - திமுகவுடன் கூட்டணியில் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரமும் மேற்கொண்டார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையை தம்பி என குறிப்பிட்டிருப்பது மய்யத்துக்கான மாற்றமா? என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications