“சபாஷ்”.. கமல்ஹாசனை வியக்க வைத்த கழிவறை.. விஷ்ணுப்பிரியா செய்த காரியம்! இது அவ்ளோ சாதாரண விசயமில்ல
சென்னை: குறைவான அளவில் தண்ணீர் செலவழிக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறையை மலைவாழ் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கட்டி இருக்கும் கட்டிடக் கலைஞர் விஷ்ணுபிரியாவை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார்.
கட்டிடக் கலைஞராகவும் சூழலியல் ஆர்வலராகவும் இருந்து வருபவர் விஷ்ணுப்பிரியா. இவர் குறைவான தண்ணீரை செலவிட்டு, சுற்றுசூழலை கெடுக்காத, இயற்கையான உரத்தை உருவாக்கும் சூழல் மேம்பாட்டுக் கழிவறையை கட்டி இருக்கிறார். நெல்லிவாசல் என்ற மலை கிராமத்தில் இயங்கி வரும் வனத்துறை அரசுப் பள்ளியில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த மாற்றுக் கழிவறையை விஷ்ணுப்பிரியா அமைத்துள்ளார். இதனை பாராட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "விஷ்ணுப்பிரியா இளம் கட்டடக் கலைஞர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சூழலியல் நெருக்கடிகளை விளக்கி அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்து 'மீள்' எனும் ஆவணப்படத்தை கடந்த ஏழாண்டுகளாக உருவாக்கி வருகிறார். இந்தப் பயணத்தில் அவர் கண்டடைந்த தீர்வுகளில் ஒன்று 'சூழல் மேம்பாட்டுக் கழிவறை' எனும் மாற்றுக் கழிப்பறை. நவீனக் கழிப்பறைகளுக்குச் செலவாகும் தண்ணீரைவிட மாற்றுக் கழிப்பறைகளுக்கு மிகக்குறைவான நீர் போதுமானது.

தவிர, மலக்குழி மரணங்கள் போன்ற கொடுமைகளுக்கும் இது தீர்வாக அமைய முடியும் என்பதைக் கண்டறிந்தவர், தற்போது தனது எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து உள்ளார். மலைக்கிராமமான நெல்லிவாசலில் செயல்படும் வனத்துறை அரசுப்பள்ளியில் தனது நண்பர்களுடன் இணைந்து மாற்றுக் கழிவறையை அமைத்துள்ளார் விஷ்ணுப்பிரியா. இங்கு பயன்படுத்தப்படும் குறைவான நீரும் தேங்கி விடாமல் கசிவுக்குழிகளின் மூலம் வடிகட்டப்பட்டு நிலத்துக்குள் நன்னீராக இறங்குகிறது.

குழியில் தங்கிவிடும் கழிவு நுண்ணுயிரிகளால் உரமாக மாற்றப்படுகிறது. சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்று வழிமுறை இது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) தினமான டிசம்பர் 12-ஆம் தேதி இந்த மாற்றுக் கழிவறை'நெல்லிவாசல் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம் அதிகத் தண்ணீர் வசதி இல்லாத இடங்களில்கூட அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கும் விஷ்ணுப்பிரியாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சூழலியலைப் பாதுகாக்கும் அவரது பயணம் தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.













Click it and Unblock the Notifications