மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கைமுறை.. தேவர் மகன் சர்ச்சைக்கிடையே மாமன்னன் பற்றி கமல்ஹாசன்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராக் இயக்கத்தில் உருவாகியுள்ள'மாமன்னன்' திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் 'மாமன்னன்'. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படம் நாளை (ஜூன் 29) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இன்று படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றனர். இதையடுத்து, மாமன்னன் படம் வெற்றி பெற கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில், மாரி செல்வராஜ் 'தேவர் மகன்' படம் குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாரி செல்வராஜ் பேச்சுக்கு கமல் ரசிகர்கள் பலரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில் கமல்ஹாசன் இன்று பதிவிட்டுள்ள ட்வீட் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, 'மாமன்னன்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல மாமன்னன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 'மாமன்னன்' படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications