41 இல்லை, 21-ம் இல்லை.. வெறும் 15தான்.. எல்லாத்துக்கும் காரணம் "அவர்"தான்.. விழிக்கும் "கதர்கள்"!
கமல் திமுகவுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் இடம் உறுதி செய்யப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டே இருக்கிறது..!
ஒரு காலத்தில் ஓஹோவென்று வாழ்ந்த காங்கிரஸ் கட்சியை ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியக் கட்சிகள் கழற்றி விடும் காலம் நெருங்கி வருகிறது என்பதுதான் அதிர்ச்சி உண்மை.. இதற்கு பிரதான காரணமும் அதே காங்கிரஸேதான்!
இன்னும்கூட திமுகவுடன் தேர்தல் முடிவாகாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.. ஒவ்வொரு முறையும் அதிக சீட் வேண்டும் என்று கேட்டு வாங்குவது, பிறகு பெரும்பாலான இடங்களில் மண்ணை கவ்வுவதே காங்கிரசுக்கு வேலையாக போய் கொண்டிருக்கிறது.

பிடிவாதம்
பீகார் தேர்தலையே எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் இருந்தே அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது.. அப்படி சீட்டுக்கள் தராவிட்டால், தனித்து போட்டியிடுவோம் என்று மிரட்டலும் விடுத்து முரண்டு பிடித்தது... பிறகுதான் 70 சீட்டுகளை ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து காங்கிரஸ் பெற்று,19 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது.

வெற்றி
இப்படித்தான் நமக்கும் அன்று நடந்தது.. 2016-ல் திமுகவிடம் 48 சீட் வாங்கி நின்று, கடைசியில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் ஜெயித்தது.. அதாவது எங்கெல்லாம் காங்கிரஸ் அன்று நின்றதோ, அங்கெல்லாம் அதிமுக அசால்ட்டாக வெற்றியை சுவைத்தது. ஆனால், இதற்கு பிறகும் காங்கிரஸ் விழித்து கொள்கிறதோ இல்லையோ, திமுக விழித்து கொள்ள வேண்டும் என்று பலர் எச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர்.. அதனால்தான் இப்போதுவரை இழுபறி நீடிக்கிறது.

குறைபாடு
அதாவது தானும் கெட்டு, கூட்டணியின் வீழ்ச்சிக்கும் காரணமாகி கொண்டிருக்கிறது காங்கிரஸ்.. காங்கிரஸிடம் முன்பு போல வீரியம் இல்லை... தலைமைத்துவம் சரியில்லை.. உள்ளூர்க் கட்சித் தலைவர்களிடம் ஆளுமை இல்லை.. ஏகப்பட்ட குறைபாடுகள் கொட்டிக் கிடக்கிறது... பழைய நினைப்பிலேயே பலரும் காலத்தை தள்ளி வருகின்றனர். பாஜகவின் வலிமையை இன்னும் காங்கிரஸ் புரிந்து கொள்ளவே இல்லை.

பொதுக்குழு
அதற்கு பதிலாக கமல் பெயர் திமுக கூட்டணியில் அடிபட்டு கொண்டே இருக்கிறது.. கமலுடன் ரகசிய பேச்சுவார்த்தைகள் திமுக தரப்பில் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.. இப்போதும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.. பொதுக்குழுவில் தனித்து போட்டி என்று கமலை சொன்னாலும், திமுக தலைவர் மீது காட்டம் காட்டினாலும், பேச்சுவார்த்தை முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள். கமல் நிறைய சீட்களை கேட்கிறார் போலும்.

ராஜ்ய சபா
அதனால், கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கிய 41 சீட்களில் 21 சீட்களை மநீம-க்கு தரலாம் என்பதே திமுகவின் பிளானாக இருக்கிறது.. இதற்கு கமல் ஒரு பதிலும் சொல்லவில்லை என்றாலும், இந்த விஷயம் தெரிந்துதான் காங்கிரஸ் மேலும் கொந்தளித்து போய்விட்டது.. இதற்கு பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.. 20 தொகுதிகள் காங்கிரசுக்கு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், 15 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்று இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. மேலும் ஒரு ராஜ்யசபா, சீட் தருவதாகவும் உறுதி தரப்பட்டுள்ளதாம்..

கமல்
இதெல்லாம் காங்கிரஸ் ஏற்குமா? ஏற்காதா என்பது வேறு விஷயம்.. அதேபோல கமல் கூட்டணிக்கு வருவாரா? வரமாட்டாரா என்பதும் வேறு விஷயம்.. ஆனால், இப்போ வந்த கமலுக்கு தரும் மரியாதை, இந்த நாட்டை ஆண்ட ஒரு பாரம்பரிய தேசிய கட்சிக்கு இல்லாமல் போனதே வருத்தத்துக்குரியது.. இதற்கு காரணம் கண்டிப்பாக கமல் கிடையாது.. ஆனால், இப்படி அடிமாட்டு விலைக்கு சீட்டுகளை குறைத்து பேரம் பேசும் நிலைமைக்கு, வேறு யாரும் காரணமாக இருக்கவும் முடியாது.. சாட்சாத் "கதர்"களை தவிர.!












Click it and Unblock the Notifications