20 ஆண்டுக்கு முன்பே சொன்ன கமல்.. நிஜமான “அன்பே சிவம்” பட காட்சி! அதே ஒடிசாவில்.. அதே ரயில் விபத்து
சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து அனைவரையும் கலங்க செய்திருக்கும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தை பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களிலேயே அனைவராலும் நினைவுகூர்ந்து போற்றப்படம் திரைப்படங்களில் ஒன்று அன்பே சிவம். கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் மாதவனும் நடித்து இருப்பார். அன்பை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

சரி.. இந்த படம் ஏன் தற்போது ஒடிசா ரயில் விபத்துடன் ஒப்பிடப்படுகிறது என்ற கேள்வி அந்த படத்தை பார்க்காதவர்களுக்கு எழலாம். காரணம், அந்த படத்தை பார்த்தவர்கள்தான், ஒடிசா ரயில் விபத்துடன் அன்பே சிவம் படத்தை ஒப்பிட்டு வருகிறார்கள். அன்பே சிவம் படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியும், ஒடிசா ரயில் விபத்துக்கும் அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்கிறது.
அன்பே சிவம் படத்திலும் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் காட்டப்படும் மாநிலம் தொடங்கி, ரயில் வரை அனைத்துமே நேற்று நடைபெற்ற ரயில் விபத்துடன் பொருந்திப்போய் உள்ளது. அன்பே சிவம் படத்தில் நடிகர் கமல்ஹாசனும் மாதவனும் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்துதான் சென்னைக்கு விமானத்தில் வரும் முடிவில் இருப்பார்கள்.
விமானம் ரத்தான காரணத்தில் அவர்கள் ரயிலில் வந்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் அப்போது அன்பே சிவம் படத்தில் பயணித்த ரயிலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான். ஆனால், படத்தில் அந்த ரயில் தடம்புரண்டு இருக்காது. அதற்கு முன்பாக சென்றுகொண்டு இருந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கும். அதன் காரணமாக இவர்கள் சென்ற கோரமண்டல் ரயில் நிறுத்தப்பட்டு இருப்பதாக படத்தில் காட்டப்பட்டு இருக்கும்.
அதே மாநிலத்தில் இருந்து, அதே ரயிலில், அதே பாதையில் விபத்து ஏற்பட்டதாக படத்தில் காட்டப்பட்ட காட்சி 20 ஆண்டுகளுக்கு பிறகு அப்படியே நடந்து இருப்பது தற்செயல் என்றாலும் பலரை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைத்து உள்ளது. இதே அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் சுனாமி குறித்தும் பேசி இருப்பார். அந்த படம் வெளியான சமயத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுனாமி என்றால் என்னவென்றே தெரியாது.
ஆனால், படம் வெளியாகி ஓராண்டு கழித்து 2004 ல் சுனாமி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் உட்பட பல நாடுகளையே புரட்டிப்போட்டது. சுனாமி நினைவு நாள் வரும்போதெல்லாம் அன்பே சிவம் படம் நினைவுகூரப்படும். ஒரு பக்கம் இந்த படத்தில் சொன்னது நடந்துவிட்டதாக ஆச்சரிப்பட்டாலும், இத்தனை உயிர்களை பறிக்கும் அதெல்லாம் நடக்கவே கூடாது என்றே மனம் விரும்புகிறது.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்திலும் ரயில் விபத்து காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இந்த ஒடிசா ரயில் விபத்துடன் விடுதலை படத்தின் விபத்து காட்சிகளையும் சிலர் பொறுத்திப்பார்த்து வருகிறார்கள். ஆனால், அன்பே சிவம் அளவுக்கு விடுதலைக்கும், இந்த விபத்துக்கு அதிக ஒற்றுமை கிடையாது.












Click it and Unblock the Notifications