சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் தூத்துக்குடி எம்பி.. திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு
சென்னை: திமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.
திமுக துணை பொதுச் செயலாளராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் திமுகவிலிருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
இதற்கடுத்து திமுகவின் அடுத்த துணை பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் திமுக பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

திமுக தலைவர்
இந்த கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்போது திமுகவின் துணை பொதுச் செயலாளர் யார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த பதவியிலிருந்து விலகியவுடன் அடுத்த து.பொது. செ யார் என்பது குறித்த ரேஸில் 5 பேர் இருந்தனர்.

மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில்
திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு மகளிர் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பதால் கனிமொழி, கீதா ஜீவன், ஆலடி அருணா, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்த 5 பேரில் கனிமொழியே அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிரபாக்கப்பட்டது.

கீதா ஜீவன்
ஆனால் கீதா ஜீவனுக்கு அண்மையில்தான் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அவர் து.பொது.செ. பதவிக்கான ரேஸில் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. எனவே மீதமுள்ள 4 பேரில் யாருக்கு அந்த பதவி வழங்கப்படுகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கனிமொழிக்கே து.பொ.செ
இந்த நிலையில்தான் திமுக பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. இதில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அப்போது கனிமொழி துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தற்போது மகளிர் அணி செயலாளராக உள்ள நிலையில் அப்பதவிக்கு புதியதொரு நபர் தேர்வாகும் வரை கனிமொழி கூடுதல் பொறுப்பாக மகளிரணி செயலாளர் பொறுப்பையும் ஏற்பார் என தெரிகிறது.

மகளிரணி செயலாளர்
கனிமொழிக்கு கிடைத்த பதவியானது சாதாரண பதவி அல்ல. உயர் பதவிகளில் ஒன்றானது. அதிகாரமிக்கது. இது போன்ற உயர் பதவிகளை கனிமொழி எதிர்பார்க்காவிட்டாலும் அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இன்று வெளியான அறிவிப்பால் கனிமொழியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications