மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்கள்.. வெளியுறவுத்துறைக்கு முக்கிய கோரிக்கை வைத்த கனிமொழி, கிருஷ்ணசாமி!
சென்னை: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதம் ஏந்திய குழுவால் கடத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி கனிமொழி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராணுவ ஆட்சி நடைபெறும் மாலியில், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள கோப்ரி நகரில் தனியார் மின்சார நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்பதற்கான முயற்சியில் அங்குள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். என்ன ஆனார்கள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு கருதி கோப்ரியில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தலைநகர் பமாகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட 5 பேருமே தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி ராஜா (36), புதுக்குடி ஊராட்சி கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26), துாத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் அடுத்த கொடியங்குளம் புதியவன், 52, நாரைகிணறு பொன்னுதுரை, 41, வேப்பங்குளம் பேச்சிமுத்து ஆகியோர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களை புளியங்குடியை சேர்ந்த மாரியப்பன் என்ற அவர்களின் உறவினர், அங்கு பணிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், ஐந்து பேரும் மும்பையை சேர்ந்த, ட்ராயிங் ரெயில் லைட்டிங் என்ற நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கல் திட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி உள்ளனர். இவர்களுடன், 100 இந்தியர்கள் இருந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், தற்போது 18 பேர் மட்டுமே அங்கு பணியில் இருந்துள்ளனர். இவர்களில் தற்போது ஐந்து பேரை ஆயுத கும்பல் கடத்தியுள்ளது. இவர்களை உடனடியாக மீட்க கோரி, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான கனிமொழி எம்.பி., தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பதிவில், "மேற்கு ஆப்ரிக்கா மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியை சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய ஐந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 5 பேரும் மிக மிக ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் நிலை என்ன என்றே தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அந்நாட்டின் தூதரகம், ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் பேசி அவர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications